சர்வதேசத்தின் சூழ்ச்சியே ஞானசார தேரரின் நாடகம்: காமினி லொக்குகே

முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் பிரச்சினையை தோற்றுவிப்பதற்காக அரசாங்கம் ஞானசார தேரரை பயன்படுத்துவதாக கூட்டு எதிரணியை பிரதிநிதிதுவபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அதேபோன்று இந்த பிரச்சினையின் ஊடாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி மாகாண சபை தேர்தலை பிற்போடுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.

ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது ஆனால் அவரை கைது செய்துள்ளார்களா என கேள்வி எழுப்பிய அவர், அவ்வாறு கைது செய்யாத பொலிஸார் பலவீனமானவர்கள் எனவும் தெரிவித்தார்.

எனவே நான்கு பொலிஸ் குழுக்களை அமைத்து ஞானசார தேரரை கைது செய்வதாக கூறிய பொலிஸ்மா அதிபர், அதனை நடைமுறைப்படுத்த தவறியதால் உடனடியாக பதவிவிலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து முன்னெடுக்கும் சூழ்ச்சியாகவே இதனை கருதுவதாக கூறிய அவர், அன்றும் ஞானசார தேரரை பயன்படுத்தியே மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களுக்கு எதிரானவர் என காட்டியதாகவும் கூறினார்.

நாட்டில் வாழும் அனைத்து சமூக பிரிவினரும் எந்தவித பேதமும் இன்று சகவாழ்வுடன் வாழ வேண்டும் என்பதே கூட்டு எதிரணியின் எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் கருத்து தெரிவித்த காமினி லொக்குகே அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்தாலும், ஊடகவியலாளர்களை வேட்டையாடும் படலத்தை நடைமுறைபடுத்தி வருவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here