தாயகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில்

இலங்கையில் 100 நாட்களைத் தாண்டியும் கண்ணீரோடு போராடிக்கொண்டிருக்கும் மக்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் கனடிய மண்ணில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ரொறொன்றோ நகரின் மத்தியில் டண்டாஸ் சதுர்க்கத்தில் இன்று கனடா நேரத்தின் படி மாலை 5 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கனடிய தமிழர் சமூகம் மற்றும் தமிழ் மாணவர் சமூகம் என்பவற்றால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேண்டுகோளில்,

மாற்றின மக்களுக்கான பரப்புரையும் கவன ஈர்ப்பு போராட்டமுமான இந் நிகழ்விற்கு கனடா வாழ் அனைத்து மக்களும் ஊடகங்களும் ஆதரவு நல்கி அணி திரண்டு தாயகத்தில் போராடும் எங்கள் உறவுகளின் கண்ணீரை உலகுக்கு எடுத்து சொல்லும் காலப்பணியில் அணி திரளுமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றோம்.

இலங்கை அரசு தொடர்ச்சியான அழிவுகளை தமிழர் தேசம் மீது நடத்தி வருகின்றது. அத்துடன் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குரிய சர்வதேச விசாரணையை மழுங்கடிக்கும் முகமாக சர்வதேசத்தையும் மனித உரிமை அவையையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து எவ்வித விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. சிறைகளுக்குள் விசாரணைகள் ஏதுமின்றி அநீதியாக ஆண்டுக்கணக்காக தமிழ்க் கைதிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றார்கள்.

சிங்கள குடியேற்றம், சிங்கள பெயர் மாற்றம், சிங்களமயமாக்கல், பௌத்த மயமாக்கல், புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகள், என கட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து பறிக்கும் வன்செயல் தொடர்ச்சியாக இன்னும் இடம் பெற்று வருகின்றது. போதை மருந்து பாவனை, கலாச்சார சீர்கேடுகள் என்பனவற்றை வேண்டுமென்றே கட்டவிழ்த்து விட்டு தமிழ் மக்களின் வாழ்வை சிதைப்பது தொடர்கின்றது.

காணாமல் ஆக்கப்படுதல், கைதுகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற பல கொடும் செயலுக்கு காரணமாக உள்ள அரச படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்; அத்துடன் அவர்களுக்கெதிரான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் கனடா வாழ் தமிழ் சமூகம், மாணவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு கனடா வாழ் அனைத்து தமிழ் மக்களும் இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டு போராடும் தாயக மக்களோடு தோளோடு தோள் நிற்குமாறு வேண்டுகின்றோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here