சதி செய்தது இலங்கை! மலேசியா விமான நிலையத்தில் நடந்தது என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கால் வைகோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணை முடிவடையாத நிலையில் தம்மை கைது செய்து சிறையில் அடைத்துவிடுங்கள் என சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வைகோ கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வைகோவை கைது செய்ய உத்தரவிட்டது சென்னை எழும்பூர் நீதிமன்றம். அதேநேரத்தில் வைகோவுக்கு ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் முன்வந்தது.

ஆனால் வைகோ இதை நிராகரித்து சிறைக்குப் போனார். பின்னர் மதிமுக நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று ஜாமீனில் வெளியே வந்தார் வைகோ.

இதனைத் தொடர்ந்து மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக வைகோ அந்நாட்டுக்கு சென்றிருந்தார். ஆனால் மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோ பெயர் இருக்கிறது.

வைகோ, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி தங்களது நாட்டில் நுழைய வைகோவுக்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. மேலும் வைகோ மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் மலேசிய அரசு கூறியுள்ளது.

வைகோவின் பாஸ்போர்ட்டையும் மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது மலேசியா. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்  இரவு 11.45 மணி அளவில் சென்னை வந்தடைந்தார் வைகோ.

அவர் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் கூறுகையில், மலேசியாவில் சிறைக்கைதி போல் நடத்தப்பட்டேன். 24 மணி நேரமாகியும் நான் சாப்பிடவில்லை.

ஈழத் தமிழர் படுகொலை குறித்து யாரும் பேசக் கூடாது என்ற இலங்கையின் சதி தான் இது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் இலங்கை அரசின் துணைத்தூதரின் அறிவுறுத்தலால் மலேசியா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டேன் என்றும் தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஸ்டாலின், விஜயகாந்த் உள்ளிடோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here