கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகம்!

கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைப்பதற்கு உதவியளிக்கவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் தம்மிடம் உறுதியளித்துள்ளனர் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் குழுவிற்குமிடையில் நேற்றையதினம் (சனிக்கிழமை) கிழக்கு முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இச்சந்திப்பில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் க்ளெயார் மேட்ரவுட் (Claire meytraud) மற்றும் உப தலைவரான இர்பான் சுலெஜ்மானி (irfan sulejmanii) ஆகியோர் அடங்கிய குழுவினர் என்னைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.இதன்போது காணாமல் போனோரின் உறவுகளுக்கு உதவியளிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு கிழக்கு மாகாணத்துக்கு உதவியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த அலுவலகங்களினூடாக இலவச சட்ட ஆலோசனைகளையும் காணாமல் போனோரின் உறவுகளுக்கு வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக காணாமல் போனோரின் உறவினர்களை உறுதிப்படுத்தும் விதமான பத்திரங்களை வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக இந்தப் பணிகள் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன” என முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here