தென்னிலங்கையை குசிப்படுத்திய வடக்கின் குழப்பம்

“ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ” இந்தப் பழமொழி இன்று இலங்கை அரசியலில் அதுவும் வடமாகாண சபைக்கு நன்றாக பொருந்துகிறது.

போரை முடித்து வைத்த மகிந்த அரசாங்கம் சர்வதேச நெருக்கடிக்குள் வேறு வழியின்றி வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி வைத்தது. வடக்கில் தோல்வி அடைவோம் என்று தெரிந்தும் நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்தது மகிந்த அரசு.

தேர்தலில் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியினைப் பெற்றது. தமி்ழ் மக்களின் வாக்குப் பதிவு ஆயிரம் செய்திகளை தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் சொல்லி நின்றன.

அபிவிருத்திகளையும், வசதி வாய்ப்புக்களையும் அள்ளி வீசுவதாக மகிந்த சொல்ல, யுத்தத்தில் யாவற்றையும் இழந்து இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையில் இருந்த தமிழ் மக்கள் அந்த சூழ்நிலையிலும் கூட தங்கள் தன்மானத்தையும், உரிமையையும் விட்டுக் கொடுக்காதும், சோரம் போகாதும் ஏகோபித்த ஆதரவினை வாக்குகளாக அள்ளி வீசினர்.

சம்பந்தன் நிறுத்திய முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தங்கள் வாக்குகளை கொடுத்து முதலமைச்சராக்கினார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், தமிழர் மனங்களில் அவ்வளவு மகிழ்ச்சி. மலர்ந்தது தமிழர் அரசு என்று புளகாங்கிதம் கொண்டனர்.

இது தான் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை என்றாலும் யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட இழப்பில் இருந்து மீளவும், தங்களுக்கான ஆதரவாக மாகாண சபை இருக்கும் என்று ஆறுதல் கொண்டனர்.

ஆனால், இன்று அந்த மாகாண சபையின் நிலையோ கவலைக்கிடமாக வந்து நிற்கிறது. வடக்கு மக்கள் ஒருமித்துக் கொடுத்த வாக்குகளுக்கு எந்தவிதமான அர்த்தமும் அற்றதாக்கியிருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள் தமிழ் மக்கள்.

ஊழல் குற்றச்சாட்டும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்களை பதவி விலகுமாறு விக்னேஸ்வரன் சொல்ல, இறுதியில் முதலமைச்சருக்கு எதிராகவே தீர்மானம் கொண்டுவந்து அவரை மாற்றுவதற்கு என்று ஒரு அணியும், அவருக்கு ஆதரவாக இன்னொரு அணியும் என்று வட மாகாண தமிழர் அரசு இரண்டாகிக்கிடக்கிறது. தமிழக அரசியலைப் பிரதிபலிப்பதைப் போன்று.

வாக்களித்த தமிழ் மக்கள் பெரும் கொதிப்பில் இருக்கிறார்கள். வடக்கில் மாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்னர், தென்னிலங்கையில் பெரும் எதிர்பலைகள் எழுந்தன.

மாகாண சபையின் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்க முடியாது என்பது நிதர்சனம். ஆனாலும் தற்போதைய நிலையில் இச்சபையினைக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாது என்று சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டலாம் என்றார்கள் அரசியல் அவதானிகள். ஆனால் இன்று கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தவுடுபொடியாக்கி இரண்டாகிக் கிடக்கிறது தமிழர் அரசு.

வட மாகாண சபையைப் பார்த்து கொதித்த தென்னிலங்கை கடும்போக்காளர்கள் இன்று கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இது குறித்து அரசியல் ரீதியில் தென்னிலங்கையில் பெரும் மகிழ்ச்சிகரமான வார்த்தைகள் பேசப்படுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசியல்வாதிகள் தங்களிடையே குழம்பிக்கொண்டிருப்பது தென்னிலங்கைக்கும், தென்னிலங்கை கடும்போக்காளர்களுக்கும் இது பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. குழப்ப வேண்டும், வட மாகாண சபையை கலைக்க வேண்டும் என்று சொன்னவர்களுக்கு இன்று அதே சபை தானாகவே கலைந்துவிடும் நிலைக்கு வந்திருக்கிறது.

இந்த நிலையானது தமிழர் அரசியலின் எதிர்கால செயற்பாட்டிற்கு பெரும் சங்கடமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அரசியலமைப்பில் மாற்றம் தொடர்பில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தசூழ்நிலையில் அதனை ஒருமித்து தமிழர்களுக்குச் சார்பாக பேசாமல் இவர்கள் இங்கே குழம்பிக் கொண்டும், தென்னிலங்கைக்கு சாதகமான விடையங்களை ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும், அரசியல் அவதானிகளும்.

இந்தக் குழப்பத்தை உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் தலையிட்டு சரியான தீ்ர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் வெறும் வாயினை மெண்டு கொண்டிருந்த தென்னிலங்கைக்கு அவல் கிடைத்ததைப் போன்றது.

இந்தச் சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழர்களின் அரசியல் தலைமைகள் தங்களின் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தென்னிலங்கை மக்களிடம் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here