கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும்

கிராமங்களில் உள்ள பாடசாலைகளை வலுப்படுத்த வேண்டுமானால் அப்பாடசாலைகளில் கல்வி கற்று சாதனை படைக்கும் மாணவர்களை கௌரவிக்க வேண்டும் என ஏசியன் விளையாட்டுக்கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கிராமங்களில் இருந்து வேறு பாடசாலைக்கு செல்வோரை கௌரவிப்பதனால் கிராமங்களில் உள்ள பாடசாலைகளின் அடைவுமட்டத்தினை அதிகரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

ஏசியன் விளையாட்டுக்கழகத்தின் ஐ.பி.எல்.கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெறுவதையிட்டு, நேற்று சனிக்கிழமை மாலை இசை நிகழ்வும் மாணவர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.

செங்கலடி அக்னி இசைக்குழுவின் அமுதகானம் நிகழ்வும் உயர்தர, ஐந்தாம்தர பரீட்சைகளில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பும் இதன்போது நடைபெற்றது.

ஏசியன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பி.ஜே.குணதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் பிரதம அதிதியாகவும் ஆரையம்பதி தபால்நிலைய அதிபர் யோகேஸ்வரன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஏசியன் விளையாட்டுக்கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினருமான பூ.பிரசாந்தன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தரும் ஏசியன் விளையாட்டுக்கழகத்தின் சிரேஸ்ட வீரருமான எம்.மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்,

மண்முனைப்பற்றின் கல்வி தரத்தினை அதிகரிக்க வேண்டுமானால் ஆரையம்பதியின் கல்வித்தரம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக ஆரையம்பதியில் உள்ள பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெயர்சொல்லும் அளவுக்கு உள்ள பல அதிகாரிகள் ஏசியன் விளையாட்டுக்கழகத்தில் உறுப்பினராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பல போராட்ட இயக்கங்களிலும் தனிச்செல்வாக்கு செலுத்தியவர்களும் இந்த ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என்பதை மறுக்க முடியாது என தெரிவித்தார்.    

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here