சம்பந்தன் உத்தரவாதம் அளித்தால் நிபந்தனையை மீள்பரிசீலனை செய்வேன்!

அமைச்சர்களான பா.சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் குறித்து கூட்டமைப்பின் தலைவர் உத்தரவாதம் அளித்தால் எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குறித்த எனது நிபந்தனையை மீள்பரிசீலனை செய்வதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த கடிதத்திற்கு நேற்று இரவு முதலமைச்சரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதலமைச்சர் பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வடமாகாண அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்களை தாமாக முன்வந்து பதிவியை இராஜினாமா செய்யுமாறு முதலமைச்சர் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வின் போது குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இரு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் அறிவித்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று ஆளும் கட்சி உறுப்பினர்களினால் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே வடமாகாண சபையில் தொடர்ந்தும் குழப்பி நிலை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here