பாடசாலை சீருடையில் மாற்றம் கொண்டுவரப்படப்போவதில்லை

பாடசாலை மாணவர்களில் சீருடையில் மாற்றம் கொண்டுவர போவதில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.மாணவர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் ஆலோசனை முன்வைத்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றம் கொண்டுவர வேண்டாம் என அறிவித்ததையடுத்து இத்திட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டன் ஜீவ ஊற்று ஆங்கிலம் அகடமியின் ஏற்பாட்டில் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தோட்டப்புர பாடசாலைகள் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்நிலையில் பாடசாலைகளுக்கு போதுமான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இவ்வாறான நிலையிலே இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வருவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். அவ்வாறு தேவைப்படும் பட்சத்தில் கட்டாயமாக இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் கொண்டுவரப்படுவார்கள்.

மலேசியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் பாலர் பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாலர் பாடசாலை பற்றி நடைபெற்ற உலக மாநாட்டில் இலங்கை சார்பாக நானும் கலந்துகொண்டிருந்தேன்.

சிறுவர்கள் 6 வயது வரை பாலர் பாடசாலை கட்டாயமாக வேண்டும் என்று நானும் கையெளுத்திட்டேன். இதை அரசாங்கம் ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். தற்போது உள்ளூராட்சி நிறுவனங்களும் ஏனைய நிறுவனங்களும் நடத்திவருகின்றமையினால் எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பில் சிந்திப்போம் என்றார்கள்.

அவ்வாறு ஆகும் பட்சத்தில் தொழில் வாய்ப்புகள் கிடைப்பதுடன் சிறுவர்கள் மன வளர்ச்சியும் மேம்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here