வடமாகாண சபையின் எதிர்காலம்?

வடக்கு அரசியல் களத்தில் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றங்களும் திருப்பங்களும், வடக்கு மாகாணசபையின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.

2013 செப்டெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பெரும்பான்மை பலத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்காக மக்கள் ஆணை வழங்கப்பட்டிருந்தது.

இப்போது வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள உள்ளக குழப்பங்கள், வடக்கு மாகாணசபையின் ஆட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு இன்னமும், 15 மாதங்கள் வரையே, இருக்கின்றன.

கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் வடக்கு மாகாணசபை மிகப்பெரிய சாதனைகள் என்று எதையும் நிகழ்த்தி விட்டதாக கூற முடியாது.

ஆனாலும், அதற்காக அதன் செயற்பாடுகளைக் குறைத்து மதிப்பிடுவது பொருத்தமல்ல.

மக்களின் எதிர்பார்ப்பு மிகையானதாகவும், அதற்கேற்ற வினைத்திறன் மாகாண அரசிடம் இல்லாததும், வடக்கு மாகாண சபை அரசாங்கம் மீதான அதிருப்திகளுக்கு முக்கிய காரணம்.

கடந்து போன காலத்தில் தடைகள், தடங்கல்கள், நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தாலும், எஞ்சியுள்ள காலத்திலாவது, தவறுகளைத் திருத்தி, வடக்கு மாகாணசபை திறமையுடன் செயற்பட வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால், வடக்கு மாகாண அரசுக்குள் இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள், வடக்கு மாகாணசபையின் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றன.

அடுத்து என்ன நடக்கும் என்று உறுதி செய்ய முடியாத நிலையே இந்தப் பத்தி எழுதப்படும் வரை நீடிக்கிறது.

முதலமைச்சராக விக்னேஸ்வரன் நீடிப்பாரா- புதிய முதலமைச்சர் தெரிவு செய்யப்படுவாரா- மாகாணசபையை கலைத்து தேர்தலை நடத்துமாறு ஆளுநரிடம் முதலமைச்சர் கோருவாரா- தொடர்ந்து முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் நீடித்தால் கூட, வடக்கு மாகாணசபையை அவரால் எந்தப் பிரச்சினையுமின்றி நடத்தக் கூடியதாக இருக்குமா? என்று பல கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆளும் கட்சிக்குள் தோன்றியிருக்கின்ற அதிகார இழுபறியினால், தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபை செயலிழந்து போகின்ற சூழல் உருவாகியிருக்கிறது.

இப்போது தோன்றியுள்ள பிரச்சினைகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரை சென்று விட்ட நிலையிலும், முதலமைச்சருக்கு ஆதரவான அணியொன்று பகிரங்கமாக உருவாகி விட்ட நிலையிலும், வடக்கு மாகாணசபையில் இனி எது நடந்தாலும் சுமுகமான சூழல் இருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது.

அதாவது எந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டாலும் கூட, முதலமைச்சர் விக்னேஸ்வரனால் மாகாண நிர்வாகத்தை சீராக செயற்படுத்தும் சூழலும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

முடிந்த வரைக்கும் இரண்டு அணிகளும் குழப்பம் விளைவிக்கவே முனையும் என்பது மாத்திரம் பிரச்சினையில்லை. அதையும் தாண்டி எஞ்சியுள்ள காலத்தில் மாகாணசபையின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதற்கு அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும்.

இரண்டு அல்லது நான்கு அமைச்சர்களைப் புதிதாக நியமிக்க முற்படும் போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இன்னொரு பெரும் தலையிடி காத்திருக்கும்.

தமிழரசுக் கட்சித் தலைமையுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டாலும், புதிய அமைச்சர்கள் நியமன விடயத்தில் அவர், தமிழரசுக் கட்சியுடன் இணங்கிப் போகவோ, அவருடன் தமிழரசுக் கட்சி இணங்கிப் போகவோ தயாராக இருக்குமா என்பது சந்தேகம்.

ஒருவேளை கட்சிக்கு அப்பால், தனக்கு வசதியானவர்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர்களாக நியமித் தால், கூட அவர்களுக்கு எதிராக ஆளும்கட்சியினரே போர்க்கொடி உயர்த்தும் நிலை ஏற்படலாம்.

அதைவிட, சபையில் ஒவ்வொரு பிரேரணையை நிறைவேற்றும் போதும், தனக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், என்ன செய்வார்களோ என்ற கலக்கம் முதலமைச்சருக்கு இருந்து கொண்டிருக்கும்.

ஏனென்றால் சந்தர்ப்பம் பார்த்து அவரைத் தோற்கடித்து விடும் வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது.

முதலமைச்சருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்கள் வடக்கு மாகாணசபையில் பலத்துடன் இருப்பது, நிச்சயமாக அத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

அதேவேளை, புதிய அமைச்சர்களை நியமிக்காமலும் முதலமைச்சரால் நீண்டகாலத்துக்கு மாகாண நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது.

ஏற்கனவே முதலமைச்சரிடம் இருந்த துறைகள், அவருக்கு அதிக வேலைப்பளு என்று கூறி ஏனைய அமைச்சர்களிடம் பகிரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தனி ஒருவராக எல்லா அமைச்சுக்களையும் நீண்ட நாட்களுக்கு கவனித்துக் கொள்ள முனைந்தால், அது மாகாணசபை நிர்வாகத்தை மேலும் சீர்குலைத்து விடும்.

அதைவிட இந்தக் காலப்பகுதியில் அரச நிர்வாகத்தில் தெரிந்தோ தெரியாமலோ நிகழும் தவறுகளுக்கும் முதலமைச்சரே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

இப்போதும் நீதியரசர் என்ற மனோநிலையில் இருந்து இறங்கி வர மறுக்கும் முதலமைச்சருக்கு நிச்சயமாக அப்படியொரு பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை வரப்போவதில்லை.

ஒரு வேளை இரண்டு மூன்று மாதங்களுக்கு அமைச்சர்கள் நியமன இழுபறி நீடித்தால் கூட, முதலமைச்சரால் தாங்க முடியாத நெருக்கடி ஏற்படும்.

அதேவேளை, விக்னேஸ்வரனை நீக்கி விட்டு புதியதொரு முதல்வர் நியமிக்கப்பட்டாலும் கூட, வடக்கு மாகாண நிர்வாகம் சீர்பெற்று விடும் என்று கூற முடியாது.

ஆளும்கட்சியின் உறுப்பினர்கள், சரி பாதியாக பிளவுபட்டு நிற்கிறார்கள். இதனை செங்குத்தான பிளவு என்று கூறலாம்.

இந்தக் கட்டத்தில் நம்பிக்கைத் தீர்மானம் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மாத்திரமன்றி, எந்தவொரு பிரேரணையையும் நிறைவேற்றுவதற்கு ஏனைய கட்சிகளின் தயவை நம்பியிருக்க வேண்டிய நிலையே இரண்டு தரப்புகளுக்கும் ஏற்படும்.

அவ்வாறான ஒரு நிலையில் வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தில் வெளித் தலையீடுகள் ஏற்படுகின்ற சூழலும் உருவாகும்.

அதைவிட, புதிய முதல்வரின் கீழ் ஆட்சி அமைக்கப்படுகின்ற நிலை ஒன்று ஏற்பட்டால் கூட, அமைச்சர்கள் நியமனத்தில் குழப்பங்கள் உருவாகலாம்.

ஏற்கனவே இருந்த அமைச்சர்களை நியமிக்க முடியாது. அப்படி நியமித்தால், அது ஊழலுக்கு துணைபோனதாகவும், ஊழல் அமைச்சரவை என்றும் முத்திரை குத்தப்படும்.

அவர்களை விலக்கி விட்டு புதிய அமைச்சர்களைத் தெரிவு செய்தால், அதேபோன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சி ஒத்துழைத்திருக்கலாமே என்ற கேள்வி எழும்.

எனவே புதிய அரசு அமைக்கப்பட்டாலும் அமைச்சர்கள் விவகாரம் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும்.

அதேவேளை, தற்போதைய சிக்கலைத் தீர்க்க, மாகாணசபையைக் கலைத்து தேர்தல் நடத்தும்படி ஆளுநரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுக்கலாம்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள முதல்வர் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கும் போது, ஆளுநர் அதனை எவ்வாறு அணுகுவார் என்ற பிரச்சினை உள்ளது.

தற்போதைய நிலையில், ஆளுநர் மாகாணசபையைக் கலைக்கும் முடிவை எடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.

அது இந்தக் குழப்பங்களை கொழும்பு வரை நீட்டிக்கும் என்பதால் ஆளுநரிடம் இருந்து அத்தகைய முடிவை எதிர்பார்க்க முடியாது. அவரது முடிவுகளிலும் அரசியல் நலன்கள் இருக்கும்.

எனவே முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருந்து மாகாணசபையை கலைக்கும் பரிந்துரை முன்வைக்கப்பட்டாலும், அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உறுதியாக கூற முடியாது.

வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு முழுமையான தீர்வு ஏதும் கிடைப்பதற்கான அறிகுறிகள் தற்போது வரை தென்படவில்லை.

அடுத்து நடக்கும் நிகழ்வு அல்லது அடுத்து எடுக்கப்படும் முடிவுகள் எத்தகையதாக இருந்தாலும், அவையும் தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அதாவது தொடர் விளைவுகளை ஏற்படுத்தும்.தமக்கு கட்சி முக்கியமல்ல ஆட்சியே முக்கியம் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

அவர் ஆட்சி என்று கூறியிருப்பது, அதிகாரத்தை அல்ல மக்களுக்கான ஆட்சியையே.இருந்தாலும், ஆட்சியைத் திறமையாக நடத்துவதற்கு கட்சியும் முக்கியமானது.

அவர் இப்போது எதிர்கொள்கின்ற நெருக்கடிகளுக்கு இது தான் காரணம். அரசியல் என்று வந்து விட்ட நிலையிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தன்னையும் சற்று மாற்றிக் கொள்ள முனைந்திருக்க வேண்டும்.

நீதியரசராக தனது திறமைகளின் மூலம் மாறியிருக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் மூலம் தான் அவர் அரசியல் தலைவரானார்.

எனவே கட்சியைப் புறக்கணித்து ஆட்சியை நடத்துவேன் என்பது, ஜனநாயக அரசியலுக்கு பொருத்தமற்றது.எளிதில் எவராலும் அணுகப்பட முடியாதவர் என்ற நிலை நீடிப்பது அவரது பெரும் பலவீனம்.

அவருக்கு ஆதரவாக கையெழுத்திட்ட மாகாணசபை உறுப்பினர் அனந்தி கூட, மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை, அமைச்சர்களுடன் தொலைபேசியில் கூட பேச முடியவில்லை என்று குற்றம்சாட்டியவர் தான்.

ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர்களுடன் கூட நெருக்கமான தொடர்புகளை பேண முடியாதவராக இருப்பது முதலமைச்சரின் பலவீனம்.

இதுபோன்ற பலவீனங்களைத் தாண்டி வெளியே வராமல், முதலமைச்சரால் கட்சிக்கு அப்பாற்பட்ட அரசியலை அவ்வளவு இலகுவாக முன்னெடுத்து விட முடியாது.

இந்தப் பாடத்தை முதலமைச்சர் இப்போதாவது கற்றுக் கொள்ள வேண்டும்.சரி- தவறுகளுக்கு அப்பால், இந்த விவகாரம் இப்போது, மக்களை உற்றுப்பார்க்க வைத்திருக்கிறது.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாணசபைக்கு, இது ஒரு சோதனைக்காலம்.

தமது பிடிச்சிராவித்தனங்களுக்காக வடக்கு மாகாண நிர்வாகத்தைப் பலி கொடுப்பதற்கு எல்லாத் தரப்பினரும் தயாராக இருக்கிறார்கள்.

வடக்கு மாகாணசபையில், கடந்த புதன்கிழமை நடந்த சிறப்பு அமர்வில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது, தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர், பசுபதிப்பிள்ளை,நந்தவனத்தில் ஓர் ஆண்டி,நாலாறு மாதமாய் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைகூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”என்ற பாடல் வரிகளை கூறி விட்டு, வெளியே போனார்,

அவர் நந்தவனத்து ஆண்டியாக குறிப்பிட்டது நிச்சயமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், போட்டுடைத்த நந்தவனத்து ஆண்டி ஒருவரல்ல, பல ஆண்டிகள் சேர்ந்தே வடக்கு மாகாணசபையின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதே உண்மை.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here