கழிவகற்றல் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அசமந்த போக்கு! மக்கள் விசனம்

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாமல் காணப்படுவதுடன் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அக்கறை செலுத்துவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள கிளிநொச்சி பொதுச்சந்தை பேருந்து தரிப்பிடம் இரணைமடு பொதுச்சந்தை இரணைமடுசந்தி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தினமும் சேரும் கழிவுகளை அகற்றுவதில் எவரும் அக்கறை செலுத்துவதில்லை.

இந்த பகுதிகளில் கழிவகற்றல் தொடர்பான முகாமைத்துவம் பின் தங்கியே காணப்படுகின்றது. இவ்வாறு கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால் துர்நாற்றம் வீசுவதுடன் இலையான்களின் பெருக்கமும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது இரு நாட்களுக்கு ஒரு தடவை கழிவுகள் அகற்றப்படுவதன் காரணமாக குறிப்பிட்ட இடங்களிலுள்ள கழிவுகள் மாத்திரமே அகற்றப்படுகின்றன.

ஏனைய இடங்களில் உள்ள கழிவுகளை அகற்றவோ அல்லது பொது இடங்களை துப்பரவு செய்யவோ நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நகரில் இருந்து கொண்டு செல்லப்படும் கழிவுகள் பரந்தன் உமையாள்புரம் பகுதியில் தனியார் காணிகளிலும் ஏ-9 வீதி புகையிரத வீதி ஆகியவற்றுக்கு அருகிலும் பொதுமக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலும் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது.

இவ்வாறு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் உரிய முறையில் கழிவுகள் அகற்றப்படாமலும் உரிய கழிவகற்றல் முகாமைத்துவம் இன்மையும் காணப்படுவதாக இப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here