அவைத்தலைவர் மீதான அதிருப்தி: தொடர்ந்தும் வலியுறுத்த அவசியமில்லை

அவைத்தலைவர் தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அதிருப்தி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கான பதிலே என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் இது குறித்து எவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் முதலமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவைத்தலைவரிடமே கையளிக்கப்பட வேண்டும்.

எனினும், வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான பிரேரணையை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தாமாகவே முன்வந்து ஆளுநரிடம் கையளித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த விடயம் குறித்து வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் அவரது நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

என்னைப் பொறுத்தவரை ஒரு போர் நிறுத்தம் வருகிறது எனில் ஒரு சர்ச்சைக்கு முடிவு வருகிறது என்றால் அந்தப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்கும் வகையிலேயே எமது கருத்துக்கள் ஒவ்வொன்றும் அமைய வேண்டும்.

முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த மாகாண சபை உறுப்பினர்களை விலக்கி வைத்துவிட்டு நாங்கள் வடமாகாண சபையைத் தொடர்ந்தும் நடத்த முடியாது.

கடந்த ஐந்து நாட்களில் குறித்த மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் வடமாகாண முதலமைச்சருக்கெதிராகச் செயற்பட்டார்கள் என்பதைக் குரோத மனப்பான்மையுடனோ அல்லது பழிவாங்கும் நோக்குடனோ தொடர்ந்தும் கருதிச் செயற்படுவது முறையல்ல.

இவ்வாறான விடயம் ஒருவேளை தவறாக இருந்தலும் கூட மாகாண சபை நிர்வாகத்தைச் செவ்வனே நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் மக்கள் எதிர்பார்க்கும் விடயம்.

இவர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என மக்கள் விரக்தி கொள்ளும் வகையிலான சூழலை நாம் தோற்றுவிக்கக்கூடாது.

எனவே இவ்வாறான கருத்தைத் தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை என்பதனையும், இந்த விவகாரத்தை இணக்கப்பாட்டுடன் தீர்ப்பதற்கான அவசியத்தை முதலமைச்சரிடம் வலியுறுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here