கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு : விவசாயிகள்

கிளிநொச்சி – பன்னங்கண்டிப் பகுதியில் பொலிசாரின் துணையுடன் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் விவசாய நிலங்கள் எதிர்காலத்தில் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகின்றது எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிகள் எவையும் இல்லாத நிலையிலும் இந்தப் பகுதியில் இருந்து தினமும் மாலை 6.00 மணி முதல் அதிகாலை வரையும் டிப்பர் வாகனங்களில் பெருமளவான மணல் கொண்டு செல்லப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைவிட பகல் வேளைகளில் ஆற்றுப்படுக்கைகளிலும், வயல் நிலங்களிலும் இருந்து சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வீதியின் இருபுறமும் இறக்கப்பட்டு குவிக்கப்படுகின்றன.

பன்னங்கண்டிப் பிரதேசத்தினை அடுத்துள்ள மருதநகர் பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளிகள் தமக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்தப் பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கும் பொலிசாருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் இந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதாவது சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கிளிநொச்சி பொலிசாருக்கு அல்லது மாவட்டத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசாருக்கு தகவல்களை வழங்கினால் உடனடியாகவே பொலிசார் அவர்களுடன் தொடர்புகொண்டு சமரச முயற்சிகளை மேற்கொண்டு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பாக விட்டு விடுகின்றனர் என கூறப்படுகின்றது.

மேலும், இந்த பகுதியில் பொலிசாரின் துணையுடன் மணல் அகழ்வில் ஈடுபடும் குறிப்பிட்ட சிலரை தவிர எவரும் அனுமதியுடன் கூட மணல் எடுக்கமுடியாது எனவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் எனவும் இந்தப் பகுதி மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here