மட்டக்களப்பில் 25 பாலங்கள் விரைவில் அமைக்கப்படும்

கிராமிய பாலங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தெரிவித்தார்.

அத்துடன், இன்னும் 25 பாலங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கிராமிய பாலம் தொடர்பில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் ஒன்றுகூடல் நேற்று(19) பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு கருத்து கூறுகையில்,

போக்குவரத்து இணைப்புகளை கட்டியெழுப்புவதன் மூலம் தூர பிரதேசங்களில் பின்தங்கிய கிராமங்கள் பலவற்றில் வசிக்கும் மக்களுக்கு சந்தை, கல்வி உட்பட சுகாதார வசதிகளுக்கான அவர்களுடைய அணுகலை அதிகரிக்கும் நோக்கில் 4,000 பாலங்களை நிர்மாணிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 30 பாலங்கள் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவற்றில் 05 பாலங்கள் அமைக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. ஏனைய 25 பாலங்களும் அமைக்கப்படவுள்ளன. மண்முனை தென்மேற்கு பிரதேச தேசத்தில் ஒரு பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதேபோன்று அடுத்த வருடமும் கிராமிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.நெல்வயல்களை அண்டியுள்ள வீதிகள் சில சிறிதாக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து செய்ய முடியாத நிலையும் இருக்கின்றது.

வீதிகளை எப்போதும் அகலமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் போக்குவரத்தினை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள பாலங்களை மழைகாலத்திற்கு முன்பு அமைக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கூறிவருகின்றோம் என்றார்.

இதேவேளை,

மாவட்ட அபிவிருத்தி இணைத்தலைவர்களில் ஒருவரான ஞா.சிறீநேசன், கிழக்கு மாகாண கால்நடை அமைச்சர் கி.துரைராஜாசிங்கம் இருவரும் கடந்த வருட நடுப்பகுதியில் நரிப்புல்தோட்டம் இறங்குதுறை,

கிண்ணையடி இறங்குதுறை, சந்திவெளி இறங்குதுறை என மூன்றுக்கு மேற்ப்பட்ட பாலங்களை அமைத்துதருவதற்குரிய சாத்திய வள அளவை மேற்கொண்டு நிரந்தர பாலங்கள் அமைத்து தருவதற்கான ஏற்பாடுகள் முன்னாள் நிதி அமைச்சு ஊடாக அதற்கான நிதிமூல முன்னெடுப்புக்கள் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுவரை காலமும் வெறும் பேச்சாகவே, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் அமைந்துள்ளன என மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here