யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்து! பலரும் தற்கொலை

யுத்தம் காரணமாக பாதிப்பட்டுள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்து நுண்கடன் நிதி நிறுவனங்கள் பாரிய பாய்ச்சலை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கில் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்தான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2009ஆம் ஆண்டுக்கு பினனர் கிளிநொச்சியில் மாத்திரம் நுண்கடன் பெற்றுக்கொண்ட 7க்கும் மேற்பட்ட சிறு வர்த்தகர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் கடன் பெற்றுக்கொண்ட பெண் ஒருவரை நுண்கடன் நிதி நிறுவனத்தை சேர்ந்த மூன்று பேர் வாய்க்காலில் வைத்து துன்புறுத்தினர்.

இதனை நான் நேரில் காண முடிந்தது. வாழ்நாள் முழுவதும் வட்டி செலுத்துவதிலேயே தமிழ் மக்கள் வாழ்க்கையை கழிக்கின்றனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றனர்.

அவர்களில் பலர் கடன் பெற்றே வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கின்றது. அவர்களில் பலர் பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்த முடியாமல் தெருவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் பொருளாதாரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

நுண்கடன் காரணமாக வடக்கில் பெண்கள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில், நுண்கடன் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி ஏன் கவனம் செலுத்தவில்லை?

வடக்கு கிழக்கில் உள்ள தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இதன் மூலம் வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தங்க நகைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஆகியோரே எடுத்துச்சென்றனர்.

இதற்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here