சகல பாடசாலைகளிலும் யோகாப் பயிற்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்

யோகாப் பயிற்சியை நடைமுறைப்படுத்துமாறு கூறி சுற்றுநிரூபத்தை சகல பாடசாலைகளுக்கும் அனுப்பினால், சகல பாடசாலைகளும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மட்டக்களப்பு ஆரோக்கிய கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை மட்டத்தில் யோகாப் பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பாடசாலைகளில் இந்த பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சிங்களப் பாடசாலைகளில் அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுவதால், அங்கு இந்த யோகாப் பயிற்சி இல்லை.

ஆனால், அனைத்துப் பாடசாலைகளிலும் யோகாப் பயிற்சியை முன்னெடுத்தால், இளம் சமுதாயத்துக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

அத்துடன், இங்குள்ள தமிழ்ப் பாடசாலைகளில் யோகாப் பயிற்சியை செயற்படுத்துவதற்கான வடிவத்தை நாங்கள் உருவாக்க முடியும்.

அறநெறிப் பாடசாலைகளிலும் கட்டாயமாக யோகாப் பயிற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அமைச்சிலிருந்து சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நான் இந்த அமைச்சுக்கு வந்த போது, முதன்முதலாக யோகாப் பயிற்றுவிப்பாளர்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இந்தப் பயிற்சி எப்படி நடக்கின்றது, இதன் மூலம் என்ன நன்மை உள்ளது என்றெல்லாம் கேட்டறிந்தேன்.

மேலும், உடலையும் உளத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதற்கும் யோகாப் பயிற்சி உதவுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here