நீண்ட வரலாற்றை கொண்ட வன்னேரிக்குளத்தை பாதுகாக்குமாறு கோரிக்கை

கிளிநொச்சியில் 64 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான வரலாற்றை கொண்ட வன்னேரிக்குளமும் அதனையண்டிய பகுதிகளும் உவராவதால் மக்கள் குடிபெயர்ந்து செல்லும் கிராமங்களாக மாறி வருகின்றன எனவும் இவற்றை பாதுகாப்பதற்கு அதிக நிதிகளை ஒதுக்கி நிலைபேறான அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறும் இக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள 42 கிராம அலுவலகர் பிரிவுகளில் ஒன்றாக காணப்படும் வன்னேரிக்குளத்தில் 495ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1700ற்கும் மேற்பட்டோர் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

பழமை வாய்ந்த கிராமங்களில் வாழந்து வந்த மக்கள் விவசாயத்தையும் நன்னீர் மீன்பிடி தோட்டப் பயிர்செய்கை என்பவற்றையும் மேற்கொண்டு வந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக இந்த கிராமங்களை அண்டிய உவர் நீர்த் தடுப்பணைகள் சேதமடைந்ததால் உவர்நீர் உட்புகுந்து பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

இதனால் இங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.

ஊவர் நீர் தடுப்பணைகள் அழிவடைந்ததால் கடற்பெருக்கு காலங்களில் மண்டைக்கல்லாறு வழியாக வரும் உவர் நீர் முடக்கனாறு மற்றும் இதனையண்டிய விவசாய நிலங்களிலும் உவர்ப்பரம்பல் காணப்படுகின்றது.

இங்குள்ள 600 ஏக்கருக்கும் மேற்பட்ட வளமான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

வளமான நீண்ட வரலாற்றைக்கொண்ட வன்னேரிக்குளத்தையும் அதனையண்டிய கிராமங்களையும் பாதுகாக்கும் வகையில் அதிக நிதிகளை ஒதுக்கி நிலைபேறான அபிவிருத்திகளை மேற்கொள்ளுமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here