தீர்வுக்கு இந்தியாவின் தலையீடு அவசியம்! தமிழிசையிடம் எடுத்துரைத்த விக்கி

தீர்வுகள் ஏதுமின்றி இலங்கையில் நீடித்து சென்று கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமும் ஆளும் பாஜக கட்சியும் ஆக்கபூர்வமானதும் உணர்வு பூர்வமானதுமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வந்துள்ள தமிழகத்தின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவி தமிழிசை சௌந்தரராஜன் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரங்கள், வடமாகாண சபை எதிர்கொண்டுள்ள சவால்கள், மக்கள் தொடர்பான விவகாரங்கள் என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை நாட்டில் நாட்டில் நடைமுறையில் அரசியலமைப்பு சட்டத்தின் 13வது திருத்தமானது சமகால நிலைமைகளுக்கு தீர்வாக அமையாது.

இதனிலும் அதிகரித்த அதிகாரங்களை உள்ளடக்கியதான பொறிமுறையொன்றே அவசியமாகும். அதனூடாகவே எதிர்பார்த்திருக்கின்ற தீர்வுகளை எட்டமுடியும்.

இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தினதும் பாரதிய ஜனதாக் கட்சியினதும் தலையீடுகளும் ஈடுபாடுகளும் அவசியமாக இருக்கின்றன.

இலங்கையிலுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு இந்திய மத்திய அரசாங்கத்தின் ஈடுபாடுகளுடனான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எதிர்பார்த்திருக்கின்றோம்.

எமது நிலைப்பாட்டை உங்களது கட்சியிடமும் மத்திய அரசாங்கத்திடமும் எடுத்துரையுங்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழிசையிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன் தங்களின் கோரிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் எமது கட்சியிடத்திலும் அதேநேரம் மத்திய அரசாங்கத்திடமும் எடுத்துரைப்பேன் என முதலமைச்சருக்கு உறுதி வழங்கியுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜனுடனான சந்திப்பின் போது வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here