சட்டவிரோத மண் விநியோகத்தை ஊக்குவிப்பவர்களே இளைஞனின் மரணத்திற்கு பொறுப்பு

சட்டவிரோத மண் விநியோகத்தை ஊக்குவிப்பவர்களே துன்னாலை இளைஞனின் மரணத்திற்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் எனும் இளைஞர் ஒருவர் பலியான செய்தி அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி குடத்தனை பிரதேசத்தில் மட்டுமல்லாது, குடாநாட்டின் பல பகுதிகளிலும் மண் கடத்தல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.

சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும், கட்டுமானப் பணிகளுக்கு மண்ணைப் பெற்றுக்கொள்வதற்கு தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்களும், கட்டுமானப்பணியாளர்களும், அதில் தங்கியுள்ள தொழிலாளர்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டவிரோத மண் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸார்நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கின்ற அதேவேளை துப்பாக்கிச் சூடுநடத்துவதையும், அதனால் ஒரு உயிர் பலியாகி இருப்பதையும் பொருத்தமான தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த காலத்தில் யாழ். குடாநாட்டில் மண் விநியோகமானது முறையாக நடைபெற்று வந்தது.

கடந்த இரண்டு வருடகாலமாக மண் விநியோகச் செயற்பாடுகள் அரசியல் ரீதியான தலையீடுகளால் தடுக்கப்பட்டதுடன், மண் விநியோகமும் சீர் குலைப்புச் செய்யப்பட்டு மக்கள் மணலைப் பெறுவதில் தடையும், சட்டவிரோத மண் வியாபாரிகளின் கைவரிசையும் தலைதூக்க காரணமாகிவிட்டது.

இந்த நிலையில் பெருந்தொகை பணச் செலவில் சட்டவிரோத மண்ணை வாங்கியே கட்டுமானப் பணிகளை செய்ய வேண்டிய நிலையில் மக்கள் மண்கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருக்கும் இளைஞனின் மரணத்திற்கான பொறுப்பை சட்டவிரோத மண் விநியோகத்தை பின்புலத்திலிருந்து ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.

சட்டவிரோத மண் வியாபாரத்திற்கு வித்திட்டவர்களே, இன்று யோகராசா தினேஸின் மரணத்திற்கு கண்டனமும், அனுதாபமும் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

சட்டவிரோத மண் விநியோகத்தை தடுப்பதற்கு பொலிஸார் முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் அப்பாவிகளின் உயிரை பலியெடுக்காத வகையில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவதுடன்,

கட்டுமானப்பணிகளுக்கான மண்ணை மக்கள் இலகுவாகவும், குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதே, இவ்வாறான சட்டவிரோத மண்விநியோக நடவடிக்கையை தடுக்க பொறுத்தமானதாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here