புலிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றியதற்காகவா எமக்கு இந்தப் பரிசு? கோத்தா கேள்வி

அரசால் கொண்டுவருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள காணாமல் போனோர் சட்டவரைபு முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,

காணாமல் போனோர் சட்டவரைபு ஒத்திப்போடப்பட்டாலும் கூட அது முற்றாக நீக்கப்படவேண்டிய ஒன்று. இல்லாவிட்டால் அதிக தியாகம் செய்து இந்த நாட்டைப் புலிகளிடமிருந்து காப்பாற்றிய படையினருக்கு அநியாயம் செய்வதாக அமைந்துவிடும்.

போர்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் படையினரைத் தண்டிப்பதற்கு இந்த சட்டவரைபு இலகுவாக வழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.

போரை முன்நின்று நடத்திய நாம் பல்வேறு வழிகளின் ஊடாகத் தண்டிக்கப்படுகிறோம், பழிவாங்கப்படுகின்றோம். ஊழல், மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் என்ற பெயரில் இந்தப் பழிவாங்கல் இடம்பெறுகின்றது.

இந்த அரசுக்குத் தேவையற்றவர்கள் மாத்திரமே இவ்வாறு பழிவாங்கப்படுகின்றனர். நியாயத்தை நிலைநாட்டுவது இப்படியா? இதுவா நல்லாட்சி? அவர்களின் அரசியல் தேவையை நிறைவேற்றுவதா ஊழல் ஒழிப்பு? தொடர்ச்சியாக நாம் இவ்வாறு தாக்கப்படுகின்றோம்.

தங்களின் இயலாமையை மறைப்பதற்காகவே எங்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கப் பார்க்கின்றனர். நாம் போரை வென்று முழுமையான சுதந்திரத்தை இவர்களுக்குக் கொடுத்ததற்காகவா எமக்கு இந்தப் பரிசு? எமது படையினரைத் தண்டிக்க நினைப்பது எந்தவகையில் நியாயம்? இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here