மாணவர்களின் பகிடிவதை செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது

பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன, இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டங்களை அண்மித்த தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்கள் 113 பேருக்கான நியமனங்கள் நேற்று கல்வி அமைச்சில் வழங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து குறித்த நியமனங்களை வழங்கி வைத்தனர்.

பெருந்தோட்டங்களை அண்மித்த தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக 2014.08.08 ஆம் திகதி வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு பாடசாலை முறைமையின் கீழ் மாவட்ட அடிப்படையில் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த இணைப்புகளுக்குறிய வெற்றிடங்களின் எண்ணிக்கை 3021. அவ்வெற்றிடங்கள் எண்ணிக்கை அந்தந்த பாடங்களின் கீழான போட்டி பரீட்சையின் புள்ளி வரிசைப்படி தகைமைப் பெற்றோர்களுக்காக 5 சுற்றுக்குள் 2691 பேருக்கு உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2017 மே மாதம் 2,3,4,5 மற்றும் 8 போன்ற தினங்களில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

அதற்கமைவாக மாகாண ரீதியில் தகைமை பெற்ற 113 பேருக்கான நியமனங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,

எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்படுகின்றபோது எந்த காரணம் கொண்டும் ஆசிரியர் உதவியாளர்கள் என்ற ஒரு பதவிக்காக நியமனம் வழங்கப்படமாட்டாது.

இந்த நியமனத்தில் பல குளறுபடிகள் நிலவுகின்றன. அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமாணி அறிவித்தலே.

எனவே எதிர்காலத்தில் அந்த தவறு ஏற்படாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன இது தொடர்பாக கல்லூரியின் பீடாதிபதியிடம் தொடர்பு கொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டேன்.

கல்லூரியில் இருக்கின்ற இறுதியான்டு மாணவர்கள் எந்த காரணம் கொண்டும் பகிடிவதையில் ஈடுபட முடியாது. அப்படி அவர்கள் பகிடிவதையில் ஈடுபட்டு அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்கப்படும்.

அண்மையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குமாறு நான் கல்லூரியின் பீடாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றேன்.

இந்த கல்லூரியை வளர்த்தெடுப்பதற்கு நான் பல வழிகளிலும் முயற்சிகளை செய்து கொண்டு வருகின்றேன். ஆனால் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவர்கள் தங்களுடைய சக மாணவர்களுக்கு பகிடிவதை கொடுப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. உங்களுடைய பெற்றோர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களுடைய பிள்ளைகளை இங்கு கல்வி கற்பதற்காக அனுப்பி வைக்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் இங்கு வந்து தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுகின்றார்கள். இதனையா பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றார்கள்?

நீங்கள் மூன்று வருடங்கள் இந்த கல்லூரியில் கல்வி பயின்று வெளியேறிவிடுவீர்கள்.

ஆனால் இன்னும் எத்தனையோ தலைமுறையினருக்கு இந்த கல்லூரியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. நீங்கள் செய்கின்ற இந்த செயற்பாடுகளால் இந்த கல்லூரியின் பெயருக்கும் அபகீர்த்தி ஏற்படுகின்றது.

இதனுடன் ஆரம்பிக்கப்பட்ட மற்ற கல்லூரிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக செயற்படுகின்றன. அங்கு இவ்வாறான பகிடி வதைகள் இடம்பெறுவதில்லை. இங்கு மட்டுமே இந்த செயற்பாடுகள் நடைபெறுகின்றது.

இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகின்ற இந்த வேலையில் இவ்வாறான செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்த செயற்பாடுகளால் புதிதாக உள்வாங்கப்பட்ட மாணவர்கள் விடுமுறையில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கை ஒன்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கல்லூரியின் பீடாதிபதிக்கு பணித்திருக்கின்றேன்.

இந்த நடவடிக்கைகள் தொடருமாயின் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதை நான் அவர்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here