டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையை அரசாங்கம் மறைப்பதாக குற்றச்சாட்டு!

நாடெங்கும் இதுவரை மொத்தமாக 84 ஆயிரத்து 73 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலில் உண்மையில்லை என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவிக்கையில்,

நாடெங்கும் நிமிடத்துக்கு நிமிடம் டெங்கு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், நோயாளிகளின் நாளாந்த அதிகரிப்பை சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு அவதானித்து வரவேண்டும்.

எனினும், கடந்த ஐந்து நாட்களாக மௌனம் அனுஷ்டித்து விட்டு இப்போது 84,073 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தகவல் தருவது விசித்திரமாக உள்ளது.

கடந்த 7ம் திகதி நாடெங்கும் மொத்தமாக 80 ஆயிரத்து 732 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தரப்பட்டது. அதன்பின் ஐந்து நாட்களில் மொத்தமாக 84 ஆயிரத்து 73 நோயாளிகள் இருப்பதாக தகவல் வந்தது.

அதன்பிரகாரம் ஐந்து நாட்களில் 3,341 டெங்கு நோயாளிகள் அதிகரித்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவலாகத் தெரியவில்லை.

இவ்வாறான தவறான தகவல்களைத் தருவதன் மூலம் சுகாதார அமைச்சு உண்மை நிலவரத்தை மூடி மறைத்து வருகின்றதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் டெங்கு நோயாளிகளுக்கான புதிய நோயாளர் அறை(வார்ட்) திறக்கப்பட்டுள்ள போதிலும் அதில் நோயாளிகள் இல்லை என மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வெளியிடுவதன் மூலம் நாட்டில் டெங்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக சுகாதார அமைச்சு மாயத் தோற்றமொன்றைக் காட்டி வருகின்றது என்பதே நிதர்சனம் என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here