ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ள கேப்பாப்புலவு மக்கள்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

சந்திப்பிற்கான ஏற்பாடுகளை தான் மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு இராணுவத் தலைமையகத்திற்கு முன்பாக 482 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி 138 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 136 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமது சொந்தக் காணிக்குள் கால்பதிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்து கொட்டும் மழை மற்றும் வெயிலுக்கு மத்தியில் இரவு பகலாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நான்கு மாதங்களுக்கு மேலாக தமது போராட்டம் தொடர்கின்ற போதிலும் தீர்வு கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய கேப்பாப்புலவு மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் வலியுறுத்தியிருந்தர்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி மற்றும் பிரதமரை, கேப்பாப்புலவு மக்கள் சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது. அவர்களுக்கு நீதிகிடைக்க வேண்டும். அதற்காக நாம் முழுமையான முயற்சிகளில் ஈடுபடவுள்ளோம்.

கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் அரசுடன் நாம் பலமுறை பேசியிருக்கின்றோம். நாடாளுமன்றத்திலும் ஒத்தி வைப்புவேளை பிரேரணை கொண்டு வந்துபேசினோம். எனினும். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அடுத்த வாரம் இந்த மக்களின் பிரதிநிதிகளை அழைத்துச்சென்று சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here