கறுப்பு ஜூலை இனப்படுகொலை தினம் பிரித்தானியாவில்!

கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவுதினம் எதிர்வரும் 23ஆம் திகதி பிரித்தானியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

பிரித்தானியா பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்பாக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 5 மணியளவில் குறித்த நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

படுகொலையை உலகிற்கு வெளிப்படுத்த ஒன்றிணைவீர் என்ற கருப்பொருளுடனான இந்த நினைவு தினத்திற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் 1983ஆம் ஆண்டில், கறுப்பு ஜூலை இனப் படுகொலைகள் இடம்பெற்று முப்பத்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டன.

பல அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிட்ட போதிலும், அன்றைய நிலைமைகள் அவ்வாறே இன்றும், அதே செயற்பாடுகள் தொடர்கின்றன.

அன்று சிறைக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகள் இது வரையிலும் தண்டிக்கப்படாத நிலையில் படுகொலைகளை பார்த்துக் கொண்டு தடுக்க முயலாத காவலர்கள் இன்றும் தண்டிக்கப்படவில்லை.

நேரடியாக படுகொலைகளை மேற்கொண்ட சியாரும் தண்டிக்கப்படவில்லை. இவை தொடர்பாக எந்தவொரு நீதிமன்றமும் கேள்வி எழுப்பவில்லை. இனியும் கேட்பார்களா? அந்த கேள்வியும் தொக்கியே நிற்கிறது. இதுவே இலங்கையின் ஜனநாயகம் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆட்சிகள் மாறி, மாறி அதிகாரத்துக்கு வந்தபோதும், ஒரு அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சிறைச்சாலைக்குள் தமிழ் கைதிகளைப் படுகொலை செய்யும் நாகரிகம் மட்டும் மாறவில்லை.

“எனது மரண தண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” என்று கூறிய அந்த விடுதலை வேங்கையின் விழிகளாக நாம் மாற வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.

இதை உணர்ந்த சமூகமாக தொடர்ச்சியாக எங்கள் அரசியல் அபிலாசைகளை நாம் வாழும் தேசங்களில் உறுதியோடு எடுத்துரைப்போம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here