யாழ். குருதிக்கொடை முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள்

ஸ்ரீமத் சோமாஸ்கந்தவேல் சுவாமிகளின் 11வது குருபூசை தினத்தை முன்னிட்டுக் குருதிக்கொடை முகாம் இன்று காலை ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த குருதிக்கொடை முகாம் யாழ். கந்தர்மடம் ஸ்ரீ சிவகுருநாத குருபீடம் மகாதேவ சுவாமிகள் ஆச்சிரமத்தினரின் (வேதாந்த மடம்) ஏற்பாட்டில் இன்று முற்பகல் ஆரம்பமானது.

ஆச்சிரமப் பீடாதிபதி வேத வித்தியாசகர் சுவாமிகள் தலைமையில் பிற்பகல் ஒரு மணி வரை இடம்பெற்றது.

இந்தக் குருதிக்கொடை முகாமில் யாழ். போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர். குருதிக்கொடை முகாமில் இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

குருதிக்கொடை வழங்கிய இளைஞர்கள் அனைவருக்கும் மர நடுகையை ஊக்குவிக்கும் நோக்கில் ஆச்சிரமத்தினரால் பயன்தரு மரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தக் குருதிக்கொடை முகாம் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுள்ளதாக ஆச்சிரமப் பீடாதிபதி வேத வித்தியாசகர் சுவாமிகள் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் குருதித் தட்டுப்பாடு காணப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தச் செய்தி எனக்கு மனவருத்தத்தைத் தந்தது. இது தொடர்பில் எங்கள் ஆச்சிரமத்திற்கு வருகை தந்த இளைஞர்கள் சிலருடன் கலந்துரையாடினேன்.

அவர்கள் வருடா வருடம் ஆச்சிரமத்தில் குருதிக்கொடை முகாமை நடாத்த வேண்டும் என்னும் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் வருடாவருடம் இந்தக் குருதிக் கொடை முகாமை ஏற்பாடு செய்து நடத்துகின்றோம்.

நாங்கள் எங்கள் ஆச்சிரமம் ஊடாகப் பல்வேறு சமயப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மனிதாபிமான நோக்குடன் இவ்வாறான குருதிக்கொடை முகாமை ஏற்பாடு செய்து நடத்துகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here