விரைவில் கலப்பு முறையில் தேர்தல்.

நாடு முழுவதும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கிடையிலான கூட்டத்திலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ரவுப் ஹகீம், மனோ கணேசன், ரிசாட் பதியுதீன், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அனுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன் மற்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்திற்கான உத்தேச திருத்த விதிகள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கையில்,

கடந்த தேர்தல்களில் நடைபெற்ற ஒட்டுமொத்த விகிதாசார முறைமை கைவிடப்பட்டு தேர்தல்கள் புதிய வட்டார, விகிதாசார கலப்பு முறையில் நடைபெறும்.

இது தொடர்பில் கடந்த மகிந்த ஆட்சியில் 2012ம் வருடம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் வட்டார, விகிதாசார தெரிவுகள் தொடர்பாக இருந்த 70:30 என்ற கணக்கு, எமது புதிய திருத்த சட்டத்தில் 60:40 ஆக மாற்றப்படும்.

அதேபோல் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில், ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்றும், இரண்டாம் அங்கத்தவராக வெற்றி பெறுகின்றவர், தோல்வியடைந்த கட்சிகளில் அதிக வாக்குகளை பெற்றவராக இருத்தல் வேண்டும் என்ற மோசடித்தனமான பழைய விதி மாற்றப்பட்டு, ஒரே கட்சியே இரண்டு வேட்பாளர்களை போட்டியிடச் செய்ய முடியும் என்ற திருத்தம், புதிய திருத்த சட்டத்தில் வரும்.

அத்துடன் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஒவ்வொரு வாக்காளரும், இரண்டு வாக்குகளை அளிக்க முடியும். இவை சிறுபான்மை கட்சிகள் சார்பாக நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றிகளாகும் என அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here