2 லட்சம் புலம்பெயர்ந்தவர்களுக்கு விசா வழங்க அரசு ஆலோசனை

இத்தாலி நாட்டில் புகலிடம் கோரி வந்துள்ள புலம்பெயர்ந்தவர்களில் 2 லட்சம் நபர்களுக்கு தற்காலிக ஐரோப்பிய ஒன்றிய விசா வழங்க அந்நாட்டு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெளியேறி மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலியில் புகலிடம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பிற ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு புகலிடம் அளிக்க தயக்கம் காட்டி வருவதால் இவ்விவகாரம் அந்நாடுகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இத்தாலியில் புகலிடம் கோரி வந்துள்ள புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 2 லட்சம் பேர்களுக்கு தற்காலிக ஐரோப்பிய ஒன்றிய விசா(EU Visa) வழங்க அந்நாட்டு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசா வழங்கப்பட்டால் புலம்பெயர்ந்தவர்கள் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் தடையின்றி பயணம் மேற்கொள்ளலாம்.

ஆனால், இத்தாலி நாட்டின் இந்த முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் விமர்சனம் செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை தாண்டி புலம்பெயர்ந்தவர்கள் எளிதில் நுழைந்தால் அந்நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என ஐரோப்பிய கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இத்தாலி நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் ‘2 லட்சம் புலம்பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக ஐரோப்பிய ஒன்றிய விசா வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், முடிவு விரைவில் அறிவிக்கப்படும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here