இந்தியாவில் கைதான அங்கொட லொக்கா

கடுவல சமயங்க உட்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களான அங்கொட லொக்கா மற்றும் லாடியா ஆகியோர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, பின்னர் தப்பிச் சென்றதாக வெளியாகி செய்தி உண்மையில்லை என பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

இந்தியாவின் லக்ஷ்மி நகரில் உள்ள புஷ்பால் திறந்தவெளி தடுப்பு முகாமில் இவர்கள் இருப்பதாக வார பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியாவின் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த தடுப்பு முகாமில் மேலும் இலங்கையர்கள் இருப்பதாகவும் அங்கொட லொக்கா மற்றும் லாடியா ஆகியோர் கடந்த மே மாதம் 20ம் திகதி குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் சில வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டிருந்தது.

பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்கள் கடந்த ஜூன் 9ம் திகதி திறந்த வெளி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களம் இவர்கள் கொலைகள் உட்பட கடும் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என இந்திய பாதுகாப்பு தரப்பினருக்கு அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் போன்று இந்திய சிறைச்சாலைகளிலும் கள்ளத்தனமாக தொலைபேசிகளில் பேசக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாகவும் அங்கொட லொக்கா இலங்கையில் உள்ள தனது நண்பர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து பிணையில் விடுதலையாகிய தான் தப்பிச் சென்றுள்ளதாக கூறியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here