உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் கட்சிகள் கழுகுப் பார்வை

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னரே அரசியல் களத்தில் கட்சித் தாவல்கள் ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அரசு மீது அதிருப்தியிலிருக்கும் சுதந்திர கட்சி உறுப்பினர்களை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை பொறுமைகாக்குமாறு கட்சித் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ள போதிலும் சில அதிருப்தியாளர்கள் அதை ஏற்கும் நிலையில் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

எனவே, குட்டித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்ததும் அதிருப்தி குழு உறுப்பினர்கள் சிலர் மஹிந்த அணியான பொது எதிரணி பக்கம் இணையவுள்ளனர் எனவும், பிரசாரம் நடைபெறும் காலப்பகுதியில் மேலும் சிலர் கட்டம் கட்டமாக இணைவதற்கும் திட்டம் தீட்டியுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

இதை மையப்படுத்தியும், புதிய அரசமைப்பை இலக்கு வைத்தே கூட்டு எதிரணியின் தேர்தல் பரப்புரை அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு இடையில் அதிருப்தி நிலையில் இருப்பவர்களை சமசரப்படுத்தும் முயற்சியும் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, பொது எதிரணி பக்கமுள்ள சிலர் அரசுக்கு ஆதரவளிக்கக்கூடிய சூழ்நிலையும் இல்லாமல் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குட்டித் தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான அரசியல் கட்சிகள் தற்போதிலிருந்தே தயார்படுத்தல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

மேலும், தொகுதிகளை பலப்படுத்தல், பிரச்சார யுக்திகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கட்சிகள் கழுகுப் பார்வை செலுத்தியுள்ளன என குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here