கிளிநொச்சி, கறுக்காய்த்தீவு கிராம மக்கள் அடிப்படை வசதிகளின்றி..

கிளிநொச்சி, கறுக்காய்த்தீவு கிரமத்திற்கான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் இன்மையால் அங்கு வசித்து வரும் 168 குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி, பூநகரிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கறுக்காய் தீவு கிராமத்தில் தற்போது 57 வரையான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளடங்கலாக 168 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

இந்நிலையில், எமது கிராமத்திற்கான குடிநீர் முதற்கொண்டு ஏனைய வசதிகள் வரை எல்லாவற்றையும் வேறு இடங்களில் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

எமது போக்குவரத்திற்காக காணப்படும் தம்பிராய் சந்தியிலிருந்து கறுக்காய் தீவு வரையான பிரதான வீதி கடந்த பல ஆண்டுகளாக எதுவித புனரமைப்புப் பணிகளும் இன்றி, குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

அத்துடன், தற்போது சாதாரணமாக துவிச்சக்கரவண்டியில் கூட பயணிக்க முடியாத நிலையில் குறித்த வீதி காணப்படுகின்றது.

எனவே எமது கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைத்தல் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை பெற்றுத்தரல் போன்ற எமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here