கொழும்பு அரசியலில் குழப்ப நிலை! தீவிர நடவடிக்கையில் மைத்திரி

தேசிய அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மத்தியில் உருவாகியுள்ள புதிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து பேசிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சின் சிரேஷ்ட அமைச்சர்கள், தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சின் அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த சந்திப்பு கடுமையான கருத்துகள் பரிமாறப்பட்ட சந்திப்பாக இருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பங்களாதேஷ் விஜயத்தை முடித்துக்கொண்டு இந்த விடயம் குறித்து பேசுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 94 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தன. எனினும், சுதந்திர கட்சியில் மகிந்த அணி, மைத்திரி அணி என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டிருந்தது.

மகிந்தவும், மைத்திரியும் முழுமையான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயற்பட்டிருந்தாலும் கூட, 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு மேலும் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவித்தன.

தமது செயற்பாடுகளை மூன்று மாதங்களுக்குள் ஒழுங்கு படுத்தாவிடின், முழு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தையும் பதவிநீக்கம் செய்யக் கோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூத்த உறுப்பினர்கள் சிலரின் கோரிக்கையை கருத்தில் எடுக்க நேரிடும் என்று அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலைத்தது போன்ற முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூத்த உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர்.

அப்போது இரண்டரை ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் கலைத்து, புதிய தேர்தலுக்கு உத்தரவிட்ட சந்திரிகா குமாரதுங்க, அதன் பின்னர் மக்கள விடுதலை முன்னணியுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார்.

எனினும், 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், தற்போதைய நாடாளுமன்றத்தை 2020ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்க முடியாது.

சந்திரிகா குமாதுங்க தனது சொந்த செல்வாக்கில் பதவிக்கு வந்தவர். எனினும், சிறிசேன அவ்வாறில்லை அவர் பெருமளவில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளினால் தான் பதவிக்கு வந்தார்.

எதிர்வரும் வரும் செப்டம்பர் மாதத்துடன், முடிவடையும் இரண்டு ஆண்டுகால புரிந்துணர்வு உடன்பாடு முடிவுக்கு வந்ததும், தாம் கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக ,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

எனினும் இவர்களின் அச்சுறுத்தலினால் அரசாங்கத்துக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்படாது. கூட்டு அரசாங்கம் பிளவுபடக் கூடும். ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கம் பலமான நிலையில் தான் இருக்கும்.

எவ்வாறாயினும். இது அரசியலமைப்பு திருத்தத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவு விலக்கப்பட்டால் கூட, நாடாளுமன்றத்தில் 107 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 6 ஆசனங்கள் மாத்திரமே தேவைப்படும்.

அதற்காக அவர்கள் 6 ஆசனங்களைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியையோ, 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ நாடக் கூடும்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here