ஜனாதிபதியின் சார்பில் குரல் கொடுக்க சுதந்திரக் கட்சி தயார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குரல் கொடுக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் முடிச்சுக்களுக்குள் சிக்கி ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக அரசியல் ரீதியாக தாக்குதல் நடத்த முயற்சித்தால், அனைத்து சவால்களையும் வெற்றி கொண்டு ஜனாதிபதிக்காக குரல் கொடுக்க சுதந்திரக் கட்சி தயார் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டி இரண்டாம் நிலை தலைமைகளை உருவாக்குவதில் ஜனாதிபதி முனைப்பு காட்டி வருகின்றார்.

இவ்வாறு புதிய தலைவர்கள் உருவாகினால் தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நாட்டில் காணப்படும் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து விடும் எனக் கருதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆளும் கட்சியின் இளைய அரசியல்வாதிகளை பலிக்கடாக்களாக்க முயற்சிக்கின்றார்.

தான் ஆட்சியில் இருந்த போது இரண்டாம் நிலைத் தலைவர்களை மஹிந்த உருவாக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இன்று ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு சில அமைச்சர்களை பிடித்துக் கொண்டு தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.

ஜனாதிபதியை பாதுகாத்துக் கொள்ள இன்று போல் என்றும் கட்சியின் உறுப்பினர்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தர்ப்பவாதிகளின் சூழ்ச்சித் திட்டங்களை இலகுவில் முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here