பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யாவிட்டால் ஜெனீவாவில் முறைப்பாடு

சுகாதார அமைச்சின் கட்டடத்திற்குள் பிரவேசித்து பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படா விட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்படும் என மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெற்றோர் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது அரசுடமையாக்க வேண்டுமெனக் கோரி அரசாங்க மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் சுமார் 7000 மாணவ மாணவியர் கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகி நீதிக்காக உயிரைப் பணயம் வைத்து போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஏனைய பல்கலைக்கழக மாணவ மாணவியரும் இணைந்து கொள்ள வேண்டும்.

மாணவர்களை கைது செய்தல், மோசமாக தாக்குதல், சிறையில் அடைத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மாணவர்களை அரசாங்கம் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வருகின்றது.

மாணவர்கள் சுகாதார அமைச்சிற்குள் பிரவேசித்து சேதம் விளைவித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

அதற்கான எவ்வித வீடியோ ஆதாரங்களும் கிடையாது. அவ்வாறான ஆதாரங்கள் காணப்பட்டால் அதனை வெளியிட வேண்டும்.

எனினும் மாணவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்த காட்சி ரீதியான சாட்சியங்கள் எம்மிடம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சாட்சியங்களுடன் ஜெனீவா சென்று முறைப்பாடு செய்ய நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here