மஹிந்த அணியோடு சுதந்திரக் கட்சி சங்கமிக்காது.

தேசிய அரசிலிருந்து வெளியேறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியில் இணையமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்காக சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு விரைவில் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா உட்பட 18 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜோன் செனவிரதன, அரசில் இருக்கும் வரை சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த முடியாது. எனவே தான் அதிலிருந்து வெளியேறி எதிரணியில் அமர்வதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது.

தேசிய அரசின் ஒப்பந்தம் டிசம்பரில் முடிவதால் அதுவரை பொறுமை காக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். இது பற்றி பரிசீலனை செய்துவருகின்றோம் என கூறினார்.

எனினும், டிசம்பர் மாதம் வரை பொறுத்திருக்க முடியாது. பிரதமர் பதவியை ஜனாதிபதி சு.க. உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இல்லையேல் வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருக்கமான அமைச்சரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரிடம் வினவியபோது,

ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தியபோது, இரண்டு பேர் மாத்திரமே அரசிலிருந்து வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

அதுவும் சுயாதீனமாக இயங்கப் போவதாகவே அவர்கள் குறிப்பிட்டனர். மாறாக, சுதந்திர கட்சியில் இருந்து செல்பவர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியுடன் இணைய மாட்டார்கள்.

எது எப்படியிருந்த போதிலும் தேசிய அரசுடனான உறவு தொடர்பில் எந்தவொரு நபரும் தனிமுடிவை எடுக்க முடியாது. இந்த விடயத்தில் கூட்டு பொறுப்பு இருக்கின்றது.

மத்திய குழுவின் ஊடாகத்தான் தீர்மானமெடுக்க வேண்டும். இதற்காக மத்தியகுழுக் கூட்டம் கூடவுள்ளது என கூறியுனார்.

மேலும், ஒருதொகுதி சு.க. உறுப்பினர்கள் தேசிய அரசை விட்டு விலகினாலும் ஏனைய சு.க. உறுப்பினர்கள் தேசிய அரசில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பார்கள் என அறிய முடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here