மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராக விந்தன் கனகரத்தினம்? ரெலோ பரிந்துரை

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராக என்.விந்தன் கனகரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர் பீடத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பரிந்துரைக்கான கடிதம் இன்றைய தினம் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அக்கட்சியின் உயர்பீடத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று வவுனியாவில் நடைபெற்றது.

9 உறுப்பினர்களைக் கொண்ட இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பா.டெனீஸ்வரன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இக்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சரினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த விசாரணைக்குழுவின் முன்பாக முறைப்பாட்டாளர்கள் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில், விசாரணைக்குழுவின் அறிக்கை முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட இரு அமைச்சர்களை பதவி விலகுமாறும், ஏனைய அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டுமென்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரபட்டிருந்தது.

இதன்போது முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சம்மதமின்றி இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்டதாக கட்சியினால் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கான விளக்கத்தை தருமாறும் கோரப்பட்டிருந்தது.

தற்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடலில் 8 உறுப்பினர்களும் ஏகமனதாக வட மாகாண சபை உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான என்.விந்தன் கனகரத்தினத்தினை தெரிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here