அத்துமீறிய குடியேற்றங்களை அகற்றி தருவதாக சுமனரத்ன தேரர் உறுதி

எதிர்வரும் பத்து தினங்களுக்குள் மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள அத்துமீறிய குடியேற்றங்களை அகற்றித் தருவேன் என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு – மீராவோடை சக்தி வித்தியாலயத்திற்குரிய விளையாட்டு மைதான காணி அபகரிப்பு மற்றும் அத்துமீறிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களால் நடத்தப்பட்டது.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த போதே அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார்.

போராட்டம் தொடர்பில், கடந்த எட்டு மாதங்களாக பாடசாலைக்கு சொந்தமான விளையாட்டு மைதான காணி அபகரிக்கப்பட்டு அத்துமீறிய குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால் இது தொடர்பில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர்கள் அசமந்த போக்கிலேயே செயற்படுகின்றனர்.

இப்பகுதியில் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் காணிகள் அத்துமீறி பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாடசாலை காணிகளும் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் பெண்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் பாலியல் ரீதியான தொல்லைகளை தருகின்றனர்.இருப்பினும் இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை மேற்கொண்ட போதும் யாரும் இதனை கவனிப்பதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வருகை தந்துள்ளார்.இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தேரர் உரையாற்றுகையில்,

அத்துமீறிய குடியேற்றம் தொடர்பிலும், பாடசாலை காணி அபகரிப்பு தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அத்துடன், எதிர்வரும் பத்து தினங்களுக்குள் குறித்த பாடசாலை மைதானத்திற்குள் அத்துமீறிய குடியேற்றங்களை நான் அகற்றித் தருவேன் என உறுதியளித்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here