சுதந்திர கட்சியினர் கவிழ்த்தால் மாற்று அரசு!

நல்லாட்சி அரசில் உள்ள சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கூட்டு எதிரணியான மஹிந்த அணிப் பக்கம் தாவி அரசைக் கவிழ்க்க முயன்றால் எதிர்க்கட்சிகளை அரவணைத்து பலமான மாற்று அரசு ஒன்றை உருவாக்குவது என்பதில் ஜனாதிபதியும், பிரதமரும் மிக உறுதியாக உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசை அமைப்பதற்காக ஐ.தே.கட்சியும், சுதந்திரக் கட்சியும் செய்து கொண்ட ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகின்றது.

அதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் அணி ஒன்று அரசிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியுடன் ஐக்கியமாகலாம் என கூறப்படுகின்றது.

அத்தகைய நிலைமை ஏற்பட்டால் நல்லாட்சி அரசு கவிழா விட்டாலும் நாடாளுமன்றில் அதன் பலம் கணிசமானதாக குறையக்கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய அரசமைப்பை உருவாக்குவதில் தீர்க்கமாக இருக்கும் நல்லாட்சி அரசு தனது பலத்தைத் தளரவிடாது மேலும் உறுதியாகக் காட்டுவதற்காக எதிர்க்கட்சி வரிசையில் உள்ள இன்னும் சில கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேவைப்பட்டால் ஈ.பி.டி.பி. ஆகியவற்றையும் அரவணைத்து ஒரு அரசை பலமானதாக உருவாக்க ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானம் கொண்டிருக்கின்றார்கள் என கூறப்பட்டது.

இதுதொடர்பில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் கூட்டு எதிரணியிலுள்ள எம்.பி.க்கள் சிலர் ஆகியோருடன் தற்பொழுது பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர் எனவும், இதற்காக வேண்டி அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு அரசைக் கொண்டு நடத்த அவர்கள் தயாராகவுள்ளனர் எனவும் அப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை குழப்பும் வகையில் அரசாங்கத்திலுள்ள சிலர் திடீரென அரசிலிருந்து பிரிந்து செல்வார்களாக இருந்தால், புதிய அரசொன்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது அரசிலுள்ள பெரும்பான்மையானோரின் கருத்தாகவுள்ளது எனவும் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here