டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 81 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

நுவரெலியா மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்று நோயால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 17 நாட்களுள் 81 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அதில் 16 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம் குறைந்து காணப்பட்ட போதிலும் வெளி மாவட்டங்களில் வேலைக்கு சென்றவர்களே டெங்கு தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த டெங்கு தொற்றுக்குள்ளானவர்கள் டிக்கோயா, பொகவந்தலாவை, கொட்டகலை, மஸ்கெலியா, உட்பட நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதங்களுடன் ஒப்பிடும் போது டெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு தொற்றிலிருந்து விடுபடுவதற்கு வேலைக்கு செல்லுமிடங்களிலும் தமது சுற்றுப்புற சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் இந்நோய்த் தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் எனவும், இந்த டெங்கு நோய் குறித்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு தொற்றுக்குள்ளாகி பலர் சிகிச்சை பெற்று வருவதால் டெங்கு நோய்க் குடம்பிகள் பரவும் பட்சத்தில் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடலாம் என வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது தொடர்பில் தோட்ட மக்களுக்கு விழிப்புணர்வுகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here