வடக்கை வாட்டியெடுக்கும் வறட்சி: 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட இடங்களில் தொடரும் வறட்சி நிலை காரணமாக குடிநீர் இன்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், கால்நடைகள் மற்றும் நீர்த்தாவரங்கள் நீரின்றி செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாக நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்காக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற வாழ்வாதார தொழில்கள் முற்றாகப் பாதிப்படைந்துள்ளன.

அந்த வகையில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களிலுமே வறட்சியின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

அத்துடன், வடமேல் மாகாணத்தில் குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், வடமத்திய மாகாணத்தில் பொலனறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களும் வறட்சியால் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரையில் வறட்சியின் காரணமாக எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறட்சியான காலநிலை நீடிக்குமானால் நீருக்கான தேவை அதிகரிக்கும் என்றும் குடிநீர் இல்லாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு உள்ளிட்ட பல இடங்களில் கடல் நீர் வற்றி உப்புறைந்துள்ளதுடன், கால்நடைகள் நீரின்றி செத்து மடியும் நிலையை எதிர்நோக்கியுள்ளதுடன், வன விலங்குகள் நீர் தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வறட்சியின் காரணமாக சரணாலயத்திற்குள் வாழும் வன விலங்குகளுக்கு தேவையான நீர் கிடைக்காததன் காரணமாக வில்பத்து தேசிய சரணாலயத்தை தற்காலிமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சரணாலயத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடுவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீரை வீண் விரயம் செய்யாது சிக்கனப்படுத்துமாறு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here