வித்தியா கொலை வழக்கில் கைதான பிரதி அதிபர்! பல குற்றச்சாட்டில் சிக்கினார்

வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மேற்கொண்ட பல முறைகேடு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை தப்பிச் செல்ல உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி பொது வேட்பாளர் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கஹவத்தை பிரதேசத்தில் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன.

குறித்த பிரச்சார கூட்டத்திற்கான மேடை அமைத்த ஷாந்த தொடம்கொடவை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை விடுவிப்பதற்காக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க உதவி புரிந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு கஹவத்தை பொலிஸ் உயர் அதிகாரியிடம் பிரேமலால் ஜயசேகரவின் பெயரை பீ அறிக்கையில் உள்ளடக்க வேண்டாம் என ஜயசிங்க அழுத்தம் பிரயோகித்துள்ளார்.

இது தொடர்பில் அந்த அதிகாரியின் பதிவிற்கமைய பொலிஸ் விசேட விசாரணை பிரிவு விசாரணை மேற்கொண்டு ஜயசிங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வழங்குவதற்கு பரிந்துரை செய்து, 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எப்படியிருப்பினும் பொலிஸ் ஆணைக்குழு இது தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

லலித், சப்ரகமுவ பொலிஸ் பிரதானியாக செயற்பட்ட காலப்பகுதியில் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இரத்தினக்கல் ஏலம் நடத்தியமை,

கிழக்கு மாகாண பொலிஸ் பிரதானியாக செயற்பட்ட காலப்பகுதியில் எல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டலுக்கு மணல் கடத்தியமை,

தென் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் போது பாதாள உலக குழுவினருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here