கிளிநொச்சியில் தொடரும் வறட்சி: நன்னீர் மீனவர்கள் கடும் பாதிப்பு!

குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் இரணைமடுக் குளத்தினை நம்பி தமது ஜீவனோபாயத்தினை முன்னெடுத்துச் செல்லும் நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கின் மிகப்பெரிய நீர்பாசனக் குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது 3 அடியாக காணப்படுவதாகவும், இதனால் மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையில் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “குளத்தின் நீர்மட்டம் தற்போது 3 தொடக்கம் 4 அடியாகக் காணப்படுவதால் மீன்பிடியில் ஈடுபட முடியாமலிருக்கின்றது. அரைவாசி சேறாகக் காணப்படுவதால் படகிலும் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

ஒரு நாளைக்கு 2கிலோ தொடக்கம் 10 கிலோ மீனே பிடிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் இது எமது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை. இது தொடர்பாக எமது சங்கத்தின் ஊடாக அரசாங்க அதிபரிற்கும், சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளுக்கும் அறிவித்திருந்தும் எதுவித தீர்வுகளும் கிடைக்கவில்லை.

இக்குளத்தினை நம்பி 210 குடும்பங்கள் வரை ஜீவனோபாயத்தினை முன்னெடுத்து வருகின்றனர். வரட்சியினால் குறித்த குடும்பங்களை சேர்ந்த 1000 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அரச அதிகாரிகள் எமக்கான நிவாரணத்தினைப் பெற்றுத்தரவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்” என அம்மீனவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இரணைமடுக் குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் குறைந்தது 5 அடி நீர் தேக்கப்பட வேண்டும் எனும் தீர்மானத்தின்படி மேலதிக நீர் வெளியேற்றப்பட்டிருந்தது. இந் நிலையில் தற்போது வறட்சியான காலநிலையால் குளத்தினது நீர்மட்டம் மேலும் குறைவடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here