பூரண அரச மரியாதையுடன் மெய்ப்பாதுகாவலரின் பூதவுடல் நல்லடக்கம்

யாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் பூதவுடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பூரண அரச மரியாதையுடன் இவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை யாழ். நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக, 15 வருட காலமாக பணியாற்றிய சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய சரத் ஹேமச்சந்திர என்பவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

இவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், பொதுமக்கள், நீதிபதிகள், மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் எனப்பலரும் அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது அனுதாபங்களையும் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் சரத் ஹேமச்சந்திரவின் அவரது சொந்த ஊரான சிலாபம் குமாரகட்டுவில் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மேல் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பிரேம்சங்கர், சசிமகேந்திரன் மற்றும் மா.இளஞ்செழியன் ஆகியோரும் மாவட்ட நீதிபதிகளான பிரபாகரன், அலெக்ஸ் ராஜா, ஜூட்சன், கருணாகரன், ரியாழ், வளன் ஆனந்தராஜா மேலும் பல தமிழ் சிங்கள நீதிபதிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், வடமாகாண பொதுமக்கள் எனப் பலரும் வருகைதந்துள்ளனர்.

மேலும், அதிதிகள் பலர் வருகைதந்திருந்த காரணத்தினால் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் உயிரை காப்பாற்றுவதற்காக உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவிற்கு சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இரு பிள்ளைகளின் தந்தையான ஹேமச்சந்திர என்பவர் நீதிபதியின் உயிரை காப்பாற்றி தன்னுயிரை நீத்ததால், அவருடைய இரு பிள்ளைகளையும் தாம் தத்தெடுத்து வளர்ப்பதாக இதன்போது நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்திருந்தார்.

மேலும், ஹேமச்சந்திரவின் இறுதிக்கிரியைக்கும், அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டதற்கும் கனிசமான அளவு பொதுமக்கள் கூட்டம் வந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

மேலும், இவருக்கு பூரண அரச மரியாதை வழங்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here