யாழ். நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து

உலகத்திற்கு மனிதாபிமானத்தை கற்றுக் கொடுத்த நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து என த.தே.மக்கள் முன்னணியின் மட்டுமாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

யாழில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை கண்டித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலானது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒர் விடயம் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணி நன்கு ஆராயப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும். இதனை காவல்துறையினர் சாதாரணவிடயமாக காட்டி திசைதிருப்பக் கூடாது எனவும் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

இளஞ்செழியன் பல்வேறு அரசியல் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிரான வழக்குகளை மிகவும் துணிச்சலுடன் கையாண்டு கடும் தண்டனை வழங்கியவர் என அவர் குறிப்பிட்டுள்ளதோடு, போர்ச் சூழல் நிலவிய காலத்திலும் கூட பல கடத்தல், காணாமல்போதல் மற்றும் கொலை வழக்குகளை முடித்து வைத்தவர் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இளஞ்செழியனுடைய மெய்ப்பாதுகாவலரின் பிரிவுத்துயரினால் கதறியழும் காட்சி உலகத்திற்கு ஒரு மிகப் பெரிய செய்தியை சொல்லியிருக்கின்றது எனவும் அவரது மெய்ப்பாதுகாவலரின் காலில் வீழ்ந்து அழுத சம்பவத்தை கண்டு நான் ஆழமாக நெகிழ்தேன் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் என சுரேஸ் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நீதிபதி இளஞ்செழியன் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இருக்கவேண்டும் என்பது காலத்தின் தேவையாகும். அவரது இருப்பை உறுதிப்படுத்துவது எம் அனைவரினதும் கடமையாகும் எனவும் சுரேஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here