அரசாங்கத்தை அம்பலப்படுத்திய ஐ.நா விசேட பிரதிநிதி எமர்ஸன்!

புதிய அரசியலமைப்பா அல்லது திருத்தமா என்பதற்கு அப்பால் இது வருமா என்பதே ஐயமாகவுள்ளது. இந்த குழப்ப நிலைகளும், மாறுப்பட்ட கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் பல்வேறு இராஜதந்திரிகளின் வருகையும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதில் கடந்த வாரம் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பென் எமர்ஷன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை முக்கியமானதொரு நிகழ்வாகும்.

இம்மாதம் 10ம் திகதி தொடக்கம் 14 ம் திகதி வரை இலங்கையில் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த அவர் நீதிபதிகள் குழாம், சிறைச்சாலையில் கடந்த பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், சிறைச்சாலையில் இருந்து விடுதலையானோர், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் என்வற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போதும் புலனாய்வுத் துறையினரின் அச்சுறுத்தல்களை
எதிர்கொள்வோர் மற்றும் நீதித்துறை அமைச்சர் என பலதரப்பட்டவர்களை சந்தித்து தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தார்.

இச்சந்திப்பின்போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் மனித உரிமை நிலைமைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், போர்குற்றங்கள் தொடர்பில் 2015 இல் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34- 1 இன் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம்
ஐ.நாவால் வழங்கப்பட்டு இருந்தது.

இதற்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் ஆதரவளித்திருந்தது. இந்த நிலையிலேயே ஐ.நாவின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான விசேட பிரதிநிதி விஜயம் செய்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளதுடன், நல்லாட்சி எனக் கூறும் இந்த அரசாங்கத்திற்கு நெருக்கடிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், ஐ.நாவில் கால அவகாசம் வழங்கி நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் சர்வதேச இராஜதந்திரிகளுக்கும், ஐ.நாவுக்கும் இலங்கையில் மனிதவுரிமைகள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வந்த நிலையில் ஐ.நா பிரதிநிதி பென் எமர்ஷன் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையின் உண்மை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்து ஐ.நா விசேட பிரதிநிதியின் கருத்து தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துக்கள் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தியும் இருக்கின்றது.

கடந்த 26 ஆண்டுகள் நடைபெற்ற போர் மற்றும் போருக்கு பின்னர் நடந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசு இதுவரை எதனையும் செய்யவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வழங்கிய இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் நான்கு மாதங்கள் கழிந்துள்ள போதிலும் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளின் பிரதான நோக்கங்களை அடைவதில் இலங்கையின் முன்னேற்றம் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கின்றது.

இலங்கையில் கீழ்தரமான மற்றும் மெருகூட்டப்பட்ட சித்திரவதைகள் இடம்பெறுகிறது எனவும், தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதித்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ள ஐ.நா விசேட பிரதிநிதி சர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு என எச்சரித்தும் இருக்கின்றார்.

ஒரு தசாப்த ஆண்டு காலமாக தமது உரிமைக்காக போராடி வரும் தமிழ் தேசிய இனம் ஆயுத ரீதியாக மேற்கொண்ட போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னர் ஜனநாயக ரீதியாக தமது உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைமை சர்வதேச இராஜதந்திரிகளிடமும், ஐ.நாவிலும் இலங்கை அரசாங்கம் சில கருமங்களை ஆற்றி வருவதாகவும், அவை மெதுவாக இடம்பெறுவதாகவும் அவர்கள் தொடர்ந்தும் பல கருமங்களை ஆற்ற வேண்டியுள்ளது.

அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறி வருகிறது. ஆனால், பயங்கரவாதம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், பல நாடுகளுக்கும் விஜயம் செய்து அந்த நிலமைகள் தொடர்பில் அவதானித்து அறிக்கையிட்டவருமான ஐ.நா பிரதிநிதி இலங்கை தொடர்பில் மேற்சொன்னவாறு
தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையைப் பார்க்கும் போது பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரலாக ஐ.நா பிரதிநிதியின் கருத்துக்களை வலுப்படுத்தும் முகமாக உண்மை நிலமையை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் நிரந்தர தீர்வுக்காக உழைக்க வேண்டிய இவ் இனத்தின் தலைமை இன்று அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக தமக்கு வாக்களித்த மக்கள் மத்தியிலும், சர்வதேச இராஜதந்திர மட்டங்களிலும் செயற்பட்டு வருவதாகவே கருத வேண்டியிருக்கின்றது.

புண்பட்ட தமிழ் தேசிய இன மக்களுக்கு ஐ.நாவின் விசேட பிரதிநிதிகள் குழுவின் கருத்துக்கள் மருந்திடுவதாகவும், தம்பால் அக்கறை கொண்டு வெளியிடப்பட்ட கருத்துக்களாகவும் தெரிகிறது.

ஐ.நாவின் விசேட பிரதிநிதிகள் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் போராட்ட குரல்களை பிரதிபலிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள அதேவேளை, அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் தலைவர் வெளிநாட்டு இராஜதந்திரி போல் அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் 2012 ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில் ‘ கட்சி என்ற அடிப்படையில் அவர்களின் வழக்குகளை முன்னெடுப்பதற்கு நிதி இல்லை’ என்ற ஒரு காரணத்தை முன்வைத்தார்.

ஐ.நா விசேட பிரதிநிதி 71 பேருக்கு அவர்கள் செய்த குற்றம் என்னவென்பது தெரியாமலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வழக்கின்றி இருப்பவர்களை விடுதலை செய்யக் கோரி அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக அதனை சட்ட ரீதியாக அணுக முற்பட்டமை பல கேள்விகளை எழுப்புகிறது.

பல்வேறு நாடுகளுக்கும் விஜயம் செய்து அறிக்கையிட்ட ஐ.நாவின் அனுபவமிக்க விசேட பிரதிநிதியின் கருத்தால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அரசாங்கம் அதனை கடும் தொனியில் வெளிப்படுத்தியும் இருக்கின்றது.

நல்லாட்சி எனக் கூறப்படும் இந்த அரசாங்கத்தின் நீதிதுறை அமைச்சர் ஐ.நாவிசேட பிரதிநிதியுடனான சந்திப்பின் போது கடும் போக்கில் நடந்து கொண்டதுடன், அவரது கருத்துக்களுக்கும் கடும் போக்கில் பதில் அளித்துள்ளார்.

இவருடைய பதிலானது சர்வதேச நாடுகளின் இராஜதந்திர வட்டாரங்களை சினமடைய செய்திருக்கின்றது. எமர்ஸன் உள்ளிட்ட ஐ.நாவின் அறிக்கையாளர்கள் ‘பண்பாற்றல் அற்றவர்கள் எனவும், அரசியல் ரீதியான செயலாண்மைத் திறனற்றவர்கள் எனவும்’ கடும் தொனியில் நீதி அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

நீதித்துறை அமைச்சருடனான சந்திப்பில் ஐ.நாவின் விசேட பிரதிநிதிகள் குழு பாதியிலேயே வெளியேறி இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீண்டகால போருக்கு முகம் கொடுத்த நாடு ஒன்றில் ஆட்சி மாற்றத்தினையடுத்து நல்லாட்சி, நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில் அந்த அரசாங்கத்தின் நீதி அமைச்சர் ஒரு சர்வதேச இராஜதந்திரியுடன் நடந்து கொண்ட முறை இந்த நாட்டின் ஜனநாயக பண்பு மீதும், பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் அரசியல் அனுபவம் தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருக்கிறது.

நீண்டகாலமாக எத்தகைய விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 71 அரசியல் கைதிகளையும் விட முடியாது என நீதி அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்தானது தமிழ் சமூகத்ததை இந்த அரசாங்கமும் தொடர்ந்தும்
அடக்கி ஆள தான் முனைகின்றதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

நீதித்துறை அமைச்சர் என்பவர் அந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒருவராக செயற்பட வேண்டும். அதைவிடுத்து ஒரு இனம் சார்ந்தோ, அல்லது மதம் சார்ந்தோ செயற்பட முடியாது.

ஆனால் இங்கையைப் பொறும்தவரை நீதி அமைச்சரே பௌத்த சமய விவகார அமைச்சராகவும் இருக்கின்றார். இதனால் அவரது கருத்துக்கள் பௌத்த கடும்போக்கு சிந்தனையாளர்களின் கருத்துக்களை ஒட்டியதாக வெளிவருவதனை அவதானிக்கவும் முடிகிறது.

மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி விடயத்தில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட கருத்துக்களும் இவ்வாறே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் பௌத்த சாசனத்தை காப்பற்றுவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் உரிய பொறுப்புக்களை ஒரே அமைச்சரிடம் கொடுத்திருப்பதானது, எவ்வாறு அவரால் நீதியை நிலைநாட்ட முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஐ.நா விசேட பிரதிநிதிகளின் உடைய சிறைச்சாலை விஜயமும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் தேசிய இனத்தின் மீது செலுத்தி வரும் ஆதிக்க போக்கை படம் பிடித்து காட்டுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் அமைச்சரவையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்தும் அமைந்துள்ளது.

இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையுடனேயே நூறுநாள் வேலைத் திட்டத்தில் அரசியலமைப்பு வரும் எனக் கூறப்பட்டது.

அதனையடுத்து இதனை உடனடியாக செய்ய முடியாது கால அவகாசம் தேவை எனக் கூறப்பட்டது.

இன்று பொதுத் தேர்தல் முடிந்தும் இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் புதிய அரசியலமைப்பு வருமா என்ற கேள்வி எழுகிறது. ஐ.நாவின் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையில் கூறப்பட்ட பொறுப்புக் கூறல், நல்லிணக்க பொறிமுறையை ஏற்படுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல்
என்கின்ற நான்கு விடயங்களும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

அதனை நிறைவேற்றுவது தொடர்பிலும் அரசாங்கம் சிரத்தை கொண்டுள்ளதாகவும் தெரியவில்லை. ஐ.நாவின் விசேட பிரதிநிதிகள் குழுவினரும் இதனையே வெளிப்படுத்தியுள்ளனர்.

19 ஆவது திருத்தத்தின மூலம் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதியினுடைய அதிகாரங்களை ஓரளவுக்கு குறைப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது.

வரப்போகின்ற அமர்வுகளில் புதிய தேர்தல் முறை சீர்திருத்தத்தையும் பாராளுமன்றத்தில் அதே மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆக, புதிய அரசியல் யாப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய முதல் இரண்டு விடயங்களும் யாப்பு திருத்தத்தின் மூலமே நிறைவேற்றப்பட்டுவிடும்.

மூன்றாவது விடயமான அரசியல் தீர்வு என்பது எட்டாக்கனியாகவே மாறிவிடும் ஆபத்து உள்ளது. இதனையே பிரதமர் 2018 ஜனவரியில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 உடன் ஐ.தே.கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகிறது. இவைகளை வைத்து பார்க்கின்ற பொழுது நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டதாகவே தெரிகிறது.

தனிநாடு தனிநாடு கோரி போராடிய தமிழ் தேசிய இனத்தின் விடிவு என்பது மீண்டும் இலவு காத்த கிளியின் நிலைமைக்கு திரும்பியுள்ளது.

-எழுத்தாளர் Thileepan-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here