மஹிந்தவிற்கு ஆதரவளிக்காமைக்கு இதுவே காரணம்: சம்பந்தன் விளக்கம்

ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கத் துடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் முயற்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காது என்று கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.

தன்னையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கடுமையாக விமர்சித்த மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியின் நாடாளுன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவுக்கு உரிய பதிலடிகொடுத்த நிலையிலேயே இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின்கீழ், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் பிரகடனம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டு எதிரணியினர் பொதுத் தேர்தலையே குறிவைத்து செயற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர்,

“ ஜனநாயகத்திற்கு ஆதரவளிக்குமாறு என்னை சுட்டிக்காட்டி தினேஷ் குணவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.

விரைவில் தேர்தலை நடத்துமாறும் கோரியிருந்தார். அரசாங்கம் வீட்டுக்கு போக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுவே கூட்டு எதிர்கட்சியின் உறுதியான நிலைபாடாக காணப்படுகின்றது. உறுதியாக அதனை அவர்கள் வலியுறுத்துகின்றனர். எனினும் உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.

2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்சவை தெரிவுசெய்ய முடியாது என்பதை மிகவும் மரியாதையாக மக்கள் கூறினர்.

மஹிந்த ராஜபக்சவை ஏற்றுக்கொள்ளக் கூடிய வாக்குகளால், மைத்திரிபால சிறிசேன தோற்கடித்தார். முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவுசெய்ய்பட்ட போது பெற்ற வாக்குகளை விட மைத்திரிபால சிறிசேன அதிக வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்க முடியாது என்பதே மக்களின் ஆணை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனநாயக ரீதியான மக்களின் ஆணைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அந்த மக்களின் ஆணையை இல்லாது செய்ய வேண்டும் அல்லது கவிழ்க்க வேண்டும் அல்லது அலட்சியம் செய்ய வேண்டும் என யாராலும் வலியுறுத்த முடியாது.

அது ஜனநாயகமற்ற செயல். அதன் பின்னர் என்ன நடந்தது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது கூட்டு எதிர்கட்சியில் இருப்போரால் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்பட்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் வரை பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பிரதமர் பதவிக்காக மஹிந்த ராஜபக்சவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியை நாடு தெரிந்திருக்க வேண்டும்.

மக்கள் மீண்டும் ஒருமுறை மக்கள் தமது ஆணையை வழங்கினர். மஹிந்த ராஜபக்ச பிரதமராக வருவதை மக்கள் மீண்டுமொருமுறை நிராகரித்தனர். இந்த உண்மையை கூட்டு எதிரணியினர் நிராகரிக்க முடியாது.

ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களைக் கைப்பற்றிது. 11 ஆசனங்கள் வித்தியாசம். 6ஆசனங்களை ஜே.வி.பி கைப்பற்றியது. 16 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. )

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து மக்கள் நிராகரித்த நிலையில் எதற்காக கூட்டு எதிரணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரவு அளிக்க வேண்டும் என்றும் சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

( சம்பந்தன் –“ ஜனாதிபதியாக வருவதில் தோல்வி அடைந்த மஹிந்த ராஜபக்ச, பிரதமராக வருவதையும் மக்கள் நிராகரித்ததுடன், பிரதமராக ரணில் விக்ரமசிங்க தொடர வேண்டும் என மக்கள் வாக்களித்தனர்.

அவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் உங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.?ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வருவதை மக்கள் நிராகரித்தனர். அது மக்களின் தெளிவான ஆணை.அதனை நீங்கள் மீற முடியாது.

நீங்கள் நினைத்தவாறு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. மக்கள் ஆணை மற்றும் அரசியலமைப்பை மீறி நீங்கள் நினைத்தவாறு அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமொன்றால், அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் அடிப்படையில் அதனை செய்யலாம்.

பணிப் பகிஷ்கரிப்பு மூலம் அரசாங்கத்தை உங்களால் கவிழ்க்க முடியாது. சதிகள் மூலம் அரசாங்கத்தை உங்களால் கவிழ்க்க முடியாது. அத்தியாவசிய சேவைகளை முடக்குவதன் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.

அதனைத் தடுப்பதற்கே இந்த உத்தியோகபூர்வ ஆவணத்தை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அத்தியாவசிய சேவைகளை முடக்கி,அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியானது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.

ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தை கவிழ்கக வேண்டும் என்பதை கூட்டு எதிர்கட்சியின் தொடர்ச்சியானதும் உறுதியானதுமான கோரிக்கையாக காணப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பல குழம்பங்களுக்கு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் பொறுப்புக்கூற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here