நாம் அதிகாரத்தில் இருந்தால் மாத்திரமே எமது பிரதேசத்திற்கு அபிவிருத்தி

நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மாத்திரமே கடந்த காலத்தில் பாதிப்பிற்கு உள்ளான எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர்க் கல்லூரியின் வரலாற்று சாதனையாளர் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் ஏழு வாரங்களில் முடிவுற இருக்கின்றது. அதன் பின்னர் என்ன நடக்கப் போகின்றது என்பது தெரியாத நிலையிலேயே நாங்கள் உள்ளோம்.

கிழக்கு மாகாண மக்கள் ஐந்து வருடங்களே மாகாண சபைக்கு ஆணையினை வழங்கியுள்ளனர். அந்த ஐந்து வருடம் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடைந்ததும் அதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்கள் ஆணையினை மீறிச்செயற்படுவதற்கு எவருக்கும் இடமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே கடந்த காலத்தில் பாதிப்புக்குள்ளான எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய முடியும்.

மேலும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஓரளவு பூர்த்தி செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், ஆன்மீக அதிதியாக இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரபு பிரபானந்த ஜி மகராஜ் உடன், பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here