யூலைக் கலவரமும் தீர்வின்றி தொடரும் தமிழ் மக்களின் கோரிக்கையும்!

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ்த் தேசிய இனம் தனது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1920 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம் சட்டவாக்க கழகத்தில் தமிழ் – சிங்கள இனங்களுக்கு இடையில் பிரதிநிதித்துவ ரீதியாக பாரிய இடைவெளியை உருவாக்கியிருந்தது.

அதனை அப்போதைய தமிழ் மிதவாத தலைமைகள் தட்டிக் கேட்ட நிலையில் சிங்கள பௌத்த மிதவாதிகள் அதனை எதிர்த்தனர்.

இதன் விளைவாக சேர் பொன் அருணாசலம் தலைமையிலான தமிழ் மிதவாத தலைவர்கள் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து தமது தலைமைப் பதவிகளையும் கைவிட்டு வெளியேறியதுடன் தமிழர் மகா சபையை உருவாக்கினர்.

அன்றிருந்து உரிமைக்காக தமிழ் தேசிய இனம் சிங்கள பௌத்த கடும்போக்காளருக்கு எதிராக பல்வேறு படிநிலைகளில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இந்த நிலை உச்ச நிலை பெற்றிருந்தது.

இதனை வெளிப்படுத்திய பிரதான சம்பவமாக 1983 யூலைக் கலவரம் இடம்பெற்றிருந்தது. இன்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் திகதிமுதல் இனக்கலவரம் என்ற பெயரால் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக கட்டவிழ்ந்து விடப்பட்ட வன்முறையே யூலைப் படுகொலை.

கலவரம் என்பது இரண்டு தரப்புக்களும் குழப்பத்தில் ஈடுபடுவதாகும். ஆனால் இது கலவரம் என்ற பெயரில் அமைதியாக இருந்த தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு வன்முறை. இதனை இனப்படுகொலைஎன்று அன்று பலராலும் விமர்சிக்கப்பட்டது.

நாட்டின் தலைநகரான கொழும்பு,மலையகம், தென்பகுதி என பரவலாக வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்கள காடையர்கள் மேற்கொண்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் ஏனைய உடமைகளும் சூறையாடப்பட்டன.

பல தமிழ்பெண்களின் கற்பு பறிக்கப்பட்டதுடன், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை வேறுபாடு இன்றி பலர் வீதிகளில் பெற்றோல் ஊத்தி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறாக தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும், கொடூரமான முறையில் வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்ட போதும் அப்போது ஆட்சியில் இருந்து ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கம் சுமார் ஒருவார காலம் நடைபெற்ற இந்த வன்முறைகளை கண்டு கொள்ளாது வேடிக்கை பார்த்ததுக் கொண்டிருந்தது.

அந்த அரசாங்கத்தின் அன்றைய அந்த நிலை அரசாங்க ஆதரவுடனனேயே இந்த படுகொலைகள் நடந்தேறியதை வெளிச்சம் போட்டுக் காட்டின.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட 53 பேர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறையில் இருந்தவர்கள் கூட கொலை செய்யப்பட்டமையானது இந்த நாட்டின் நீதித்துறை மீதும் கேள்வியை எழுப்பியிருந்தது. ஆகவே இவை அனைத்தும் ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது நிரூபணமாகிறது.

இதனை பின் நாட்களில் ஆட்சிக்கு ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்துடன் ஆட்சிக்கு வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம் பெறுவதற்கு காரணமாக விளங்கியிருந்தார்.

1982 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ என்று தெரிவித்திருந்ததுடன், வடக்கு, கிழக்கு மக்கள் தெர்ர்பிலும் தெரிவித்த கருத்துக்கள் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான நடவடிக்கைளை ஜே.ஆர் அரசாங்கம் கண்டு கொள்ளாது என்பதை புலப்படுத்தியிருந்தது.

யூலைக் கலவரம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றுவதந்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கப்பல் சேவையும் இடம்பெற்றது.

தலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் அடித்து விரட்டப்பட்ட நிலையில் அவர்கள் தமது சொந்த இடமான வடக்கு, கிழக்கிற்கும் ஏனையவர்கள் இந்தியாவிற்கும் குடிபெயர்ந்திருந்தனர்.

ஐ.நாவின் முன்னாள் மனிதவுரிமை ஆணையாளர் நவிப்பிள்ளை அவர்கள் ‘ஒரு இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்களை தனியாகவோ, கூட்டாகவோ அழித்தொழிப்பது என்பது ஒரு இனப்படுகொலைக்கு சமன்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் யூலைப் படுகொலையே தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் அடக்கு முறை ஆட்சியையும், இனப்படுகொலை முகத்தையும் உலகிற்குபடம் போட்டு காட்டியது.

தமிழ் தேசிய இனமும் விரும்பியோ, விரும்பாமலோ இந்த நாட்டில் நிம்மதியாக தாமும் வாழ்வதற்காக தற்காப்புக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.

ஆயுதப் போராட்டம் இந்த படுகொலைக்கு பின்னரே தீவிரமும் பெற்றிருந்தது. இனக்கலவரத்தால் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட கோபமும், ஆத்திரமும் அவர்களை ஆயுதப் போராட்டத்திற்கு வலிந்து தள்ளியிருந்தது.

தென்பகுதியில் இருந்து தமிழ் மக்கள் விரப்பட்ட நிலையில் அதன் பின்னர் இலங்கை இராணுவம் ஒரு ஆக்கிரமிப்பு படையாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசம்மீது தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்ந்தது.

அதிலிருந்து தம்மையும், தமதுமண்ணையும் பாதுகாக்க தமிழ் இளைஞர்கள், யுவதிகள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். 2009 வரை தமிழ் மக்கள் ஆயுத ரீதியாக போராடி வந்த நிலையில்சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் மௌனிக்கச் செய்யப்பட்டது.

யூலைப் படுகொலையை அடுத்து தீவிரம்பெற்ற ஒரு இனத்தின் ஆயுத ரீதியான விடுதலைப் போர் முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் அந்த மக்களின் உரிமை என்பது இன்று வரை கானல் நீராகவே இருக்கின்றது.

கடந்த மஹிந்த அரசாங்கம் போரை முடிவுக்கு கொண்டு வந்த போதும் தமிழ் தேசியஇனத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயலவில்லை. சர்வதேச சமூகத்தின் அதரவுடன் போரை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியிருந்தார்.

இதனால் தமிழர் விவகாரத்தை முன்வைத்து மஹிந்த அரசாங்கத்திற்கு சர்வசே சமூகம் கடும் அழுத்தம் கொடுத்து வந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரணில் – மைத்திரி கூட்டாட்சி உருவாகியது.

ஆட்சி மாற்றத்தின் போது ஜனாதிபதியின் நிறைவேற்றுஅதிகாரத்தை ஒழித்தல், தேர்தல் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துதல், நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணல் என்பவற்றை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதாக தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்த இந்த அரசாங்கம்,

ஜனாதிபதி அதிகாரங்கள் சிலவற்றை குறைத்து அதனை தற்போதைய நடைமுறை அரசியல் யாப்பின் மூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளது.

தேர்தல் திருத்தச சட்ட மூலம் கூட இந்தயாப்பின் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ற விடயத்தில் அரசாங்கம் சிரத்தை கொண்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தென்னிலங்கையின் பௌத்த மகாநாயக்கர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களும், அரசாங்கத்தின் பிரதானிகள் தெரிவித்து வரும் கருத்துக்களும் ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலிய சர்வதேச சமூகத்தையும், அதற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் மக்களை எரிச்சலூட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.

இந்த நாட்டின் சிங்கள பௌத்த அடிப்படை வாதிகளும், பௌத்த தேசிய கடும் போக்காளர்களும் இனப்பிரச்சினையை தீர்க்க விரும்பாது தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஆளுவதிலும் இந்த நாட்டை ஒரு சிங்கள பௌத்த தேசிய நாடாககாட்டுவதிலும் முனைப்பாக இருப்பதாகவே எண்ணவேண்டியுள்ளது.

இந்த கடும்போக்காளர்களுக்கு எதிராக செயற்படுவதற்கு மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கமும் தயங்குகிறது. இத்தகைய குழப்பங்களுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்கள் அடுத்த ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் அரசாங்கம் அமைத்துள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. அதன் பின் இந்த தேசிய அரசாங்கம் நீடிக்குமா…?

அல்லது ஒரு கட்சிதனக்கான ஆதரவைத் திரட்டி ஆட்சி அமைக்குமா..? என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும்தனித்து ஆட்சி அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதையும் அவதானிக்க முடிகிறது.

தமிழ் மக்களின் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இன்று வரையில் இந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பும்,சட்டங்களும் அவ்வப்போது ஆட்சி செய்பவர்களின் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதற்கும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் தங்களுக்கு இடையிலான அரசியல் எதிரிகளை மௌனிக்கச் செய்து அவர்களை செயலிழக்கச் செய்வதையே நோக்கமாககொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையிலேயே இந்த நல்லாட்சி அரசாங்கமும் 5வருடங்களுக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற சட்ட மூலத்தை இயற்றி பலவீனமுற்று இருக்கும் இரண்டு கட்சிகளும் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக உருவாக்கின என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், தமது இருப்புக்கான மாற்றங்கள் தற்போதைய யாப்பில் திருத்தச்சட்டங்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பு வருமா…? அல்லது தற்போதைய அரசியல் யாப்பில் திருத்தத்துடன் அது முடிவுக்கு வருமா…? என்பதே கேள்வியாகவுள்ளது.

1983 யூலைப்படுகொலை ஆயுதப் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு மூலதனமாக கொண்டு மாறிவந்த சர்வதேச சூழலை சரியாக பயன்படுத்த கூட்டமைப்பு தலைமை தவறியிருக்கிறது.

கூட்டமைப்பின் ஆதரவுடன் சர்வதேச ரீதியில்இருந்த அழுத்தங்களை குறைத்து இராஜ தந்திர வெற்றியை இந்த அரசாங்கம் பெற்றிருக்கிறது.

குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 2015 இல் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34-1 இன் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் இந்த காலநீடிப்பில் அரசாங்கம் வெற்றிபெற்றிருக்கிறது.

இந்த நிலையில் இன்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர் தீவிரம் பெற்ற தமிழ் தேசியஇனத்தின் உரிமைப் போராட்டமும், அதன் கோரிக்கைளும் இன்றும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் புதிய குடியேற்றங்களின்மூலமாகவும், இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவும் முன்பை விடவும் மோசமான நிலைக்குசென்றிருக்கின்றது. இனவிகிதாசாரத்தையும், இனப்பரம்பலையும் தேர்தல்களை அடிப்படையாக வைத்து மாற்றியமைக்கும் முயற்சிகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தீவிரமாக நடைபெறுகின்றது.

இந்த நாட்டில் புரையோடி போயுள்ள தேசிய இனப்பிரச்சனை தீர்க்கபடாத வரையிலும், நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்காத வரையிலும்உண்மையான நல்லிணக்கத்திற்கான வாய்ப்பே இல்லை. இதனை தென்னிலங்கையின் பிரதான இருஅரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும், தமிழ் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த புரிதலின் அடிப்படையில் அவர்கள் இதயசுத்தியுடன் செயற்படமுன்வர வேண்டும். புதிய அரசியலமைப்பு மூலம் இந்த பிரச்சினையை தீர்க்கஅரசிற்கும், தமது தலைமைகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்புஜனநாயகத்தையும், நல்லிணக்கத்தையும், அபிவிருத்தியையும் விரும்பும் இந்த நாட்டுமக்கள் அனைவரதும் கடமையாகும்.

அதன் மூலமே ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டு இது எமது நாடு என்று ஒன்றாக பயணிக்க கூடிய ஒரு நிலை உருவாகும்.

-எழுத்தாளர் Thileepan –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here