ரவி கருணாநாயக்க தொடர்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம்

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் தீர்மானிப்பார் என அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி, ரவி கருணாநாயக்க தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுப்பார் என லக்ஸ்மன் யாபா அபேவர்தன கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் போது அமைச்சர்கள் பதவி விலகினால் நல்லது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நாட்டுக்கும், கட்சிக்கும் மக்களுக்கும் அன்பு காட்டினால் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் ஆழ்த்தாது தீர்மானம் எடுக்க வேண்டும்.

தாம் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்றால் விசாரணைகளின் பின்னர் அதே இடத்திற்கு திரும்ப செல்ல முடியும்.

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் முன்னர் செய்ய வேண்டிய பல வேலைகள் உண்டு. அவ்வாறு செய்யாவிட்டால் நாம் முன்பு இருந்த அதே நிலைப்பாட்டை பின்பற்ற நேரிடும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்ற காலத்தில் பதவி வகித்த மத்திய வங்கியின் ஆளுனரை ஜனாதிபதி பணி நீக்கியிருந்தார்.

எனவே எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி சரியான தீர்மானத்தை எடுப்பார். மத்திய வங்கியின் ஆளுனரை பணி நீக்க எடுத்த தீர்மானத்தைப் போன்றே தீர்மானம் ஒன்றை ஜனாதிபதி எடுப்பார்.

இந்த ஆணைக்குழு ஊடாக மக்கள் தெரிந்து கொள்ளாத பல விடயங்களை தெரிந்து கொண்டனர்.

சில அரசியல்வாதிகள் எவ்வாறு தொடர்புபட்டார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

எனவே இந்த விடயமானது அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது என அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here