என்னால் அதனை அனுபவிக்க முடியவில்லை!

நாட்டில் அனைவரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்ற நிலையில், என்னால் அதனை அனுபவிக்க முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், பல நாடுகளிலும் எனது தலைமையிலான குழுவினர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“என்னால் வெளிநாடுகளுக்கு செல்லமுடியவில்லை. சர்வதேச நாடுகள் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க காத்திருக்கின்றன. அத்துடன், பல நாடுகளிலும் எனது தலைமையிலான குழுவினர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு கொமன்வெல்த் மாநாட்டுக்காக, அவுஸ்திரேலியா சென்றிருந்த போது, என்னைக் கைது செய்யுமாறு சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர். பிரித்தானியா சென்றிருந்த போது, எனது குழுவில் இருந்தவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முயன்றனர்.

மேலும், நான் அமெரிக்கா சென்ற போது எனக்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றனர். எனினும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நான் முறையிடவில்லை” என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் 30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் நாட்டு மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். எனினும் என்னால் அதனை அனுபவிக்க முடியவில்லை.

எவ்வாறாயினும், போர் முடிவுக் கொண்டு வரப்பட்டது தான் நல்லிணக்கம். இன்று நல்லிணக்கத்தின் பெயரால், சிலர் நாட்டைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here