இரு நாட்களில் 61 மீனவர்கள் கைது!

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 2 நாட்களில் 61 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 100க்கும் மேற்பட்ட விசைப்படகில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் நள்ளிரவில் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 3 விசைப்படகையும், அதில் இருந்த 12 மீனவர்களையும் சிறைப்பிடித்து சென்றனர்.

தற்போது சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் இந்த மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் இராமேஸ்வரம் மீனவர்களிடையே மிகப்பெரிய சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இதனையடுத்து நேற்று மீண்டும் 12 பேரை சிறைபிடித்தது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மீனவர்கள், மத்திய அரசும், மாநில அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இலங்கை வசமுள்ள 175 விசைப்படகையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here