இந்த நாட்டிலே சகோதர இனங்களோடு ஐக்கியமாக வாழ வேண்டும்! சிறீநேசன்

ஓரினத்தவர்கள் மாத்திரம் அளவுக்கு அதிகமான உரிமைகளையும், சுதந்திரத்தினையும் அனுபவித்துக் கொண்டு ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் போக்கு காணப்படுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை – வீரமுனையில் 232 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தின் 27வருட ஆண்டை நினைவு கூர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது நாட்டை பொறுத்த மட்டில் படுகொலைகளுக்கு மாத்திரம் பஞ்சமில்லை. கொக்கட்டிச்சேலை, மகிழடித்தீவு, மயிலந்தனை, நாகர் கோயில், குமுதினி படகு படுகொலை, திராய்க்கேணி, உடும்பன்குளம், நிந்தவூர், வீரமுனை, நாவிதன்வெளி படுகொலை என செல்கின்றது.

இந்த நாட்டில் அராஜகமான, காடைத்தனமான ஆட்சி நடைபெற்றதற்குரிய அடையாளங்களாக இவ்வாறான படுகொலைகளை சுட்டிக்காட்ட முடியும்.

232 மக்கள் அன்று இந்த ஆலயத்திலே அநீதியான, அராஜகமான முறையில் படுகொலை செய்யப்படடிருந்தார்கள். இங்கிருக்கின்ற பொறுப்புள்ள அரசாங்கம் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கான தண்டனைகளை வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் குற்றம் இழைத்த குற்றவாளிகளுக்கு பதவி உயர்வுகளை பெற்றுக்கொடுத்ததோடு அவர்களை கௌரவித்து மரியாதைக்குரியவர்களாக மதிக்கும் கேவலமான செயற்பாட்டினையே செய்து வருகின்றது.

இன்றைய நல்லாட்சியானது எமது மக்கள் பன்னெடும் காலமாக பட்ட துன்பதுயரங்களை பார்க்க வேண்டிய தேவையுள்ளது. பட்டப்பகலில் ஆலயத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த அனைத்து மக்கள் கண்கள் முன்னாலும் கொடூரர்களின் கோரத்தாண்டவம் நிகழ்ந்திருக்கின்றது.

அதற்கான சான்றுகளாக இன்றும் அந்த இடத்தில் உயிர் தப்பி வாழ்பவர்கள் வாழ்கின்றார்கள் ஆனால் குற்றவாளிகள் தண்டடிக்கப்படாமல் சுற்றித்திரிகின்றார்கள்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் பல்வேறுபட்ட படுகொலைகள் நடைபெற்றிருந்தாலும் எந்த ஒரு படுகொலையிலும் கொலையாளிகள் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் மனவேதனை தரும் விடயமாகும் என சுட்டிக்காட்டினார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here